சமாஜ்வாதி கட்சியில் அகிலேஷுக்கு முஸ்லிம் நிர்வாகிகள் எதிர்ப்பு – ஆஸம்கான் குடும்பத்துடன் சமாதானம் பேச ஜெயந்த் சவுத்ரி தூது?

புதுடெல்லி: உ.பி. சட்டப்பேரவை தேர்தலில் சமாஜ்வாதி கட்சியின் தோல்விக்குப் பிறகு அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் சிங் யாதவிற்கு எதிராக கட்சியின் முஸ்லிம் நிர்வாகிகள் அதிருப்தி காட்டத் தொடங்கியுள்ளனர்.

கட்சியின் இணை நிறுவனரும் முக்கிய முஸ்லிம் தலைவருமான ஆஸம்கான் தரப்பினர் இதில் முக்கியமானவர்கள். ஆஸம்கான் கடந்த 2020 பிப்ரவரி முதல் 2 வருடங்களுக்கும் மேலாக சீதாபூர் சிறையில் உள்ளார். உ.பி.யின் ராம்பூர் தொகுதி எம்.பி.யான இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன.

இந்நிலையில் ஆஸம்கானை அகிலேஷ் ஒரே ஒருமுறை மட்டும் சீதாபூர் சிறையில் வந்து சந்தித்தார். இதன் பிறகு ஆஸம்கானுக்கு ஆதரவாக வேறு எந்த நடவடிக்கையும் அகிலேஷ் எடுக்கவில்லை என ஆஸம்கானின் செய்தித் தொடர்பாளர் புகார் தெரிவித்தார்.

அகிலேஷ் மவுனம்

தேர்தல் நேரத்தில் கைதான கைரானா தொகுதி சமாஜ்வாதி எம்எல்ஏ நாஹீத் ஹசனை அகிலேஷ் சிறைக்கு சென்று சந்திக்கவில்லை. இதையடுத்து பரேலி சமாஜ்வாதி எம்எல்ஏ ஷாஜீல் இஸ்லாமிற்கு சொந்தமான பெட்ரோல் பங்க்கின் அனுமதி பெறாதக் கட்டிடம் உ.பி. அரசால் இடிக்கப்பட்டபோது அகிலேஷ் மவுனமாக இருந்தார். இந்த இரு விவகாரங்களில் அகிலேஷை, கட்சியின் சம்பல் தொகுதி எம்.பி. ஷபீக்கூர் ரஹமான் புர்க் கண்டித்து அறிக்கை வெளியிட்டார்.

உ.பி. சட்டப்பேரவை தேர்தலில் அகிலேஷ், கர்ஹால் தொகுதியிலும் ஆஸம்கான், ராம்பூர் நகரிலும் வெற்றி பெற்றனர். இதனால் இவ்விருவரும் ஏற்கெனவே வகித்த எம்.பி. பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் ஆஸம்கர், ராம்பூர் ஆகிய மக்களவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வரவுள்ளது. இந்த 2 தொகுதிகளும் முஸ்லிம்கள் அதிகம் கொண்ட தொகுதிகள் ஆகும்.

இந்தச் சூழலில் சமாஜ்வாதி கட்சியில் முஸ்லிம் நிர்வாகிகளின் எதிர்ப்புகளால் அக்கட்சிக்கு இடைத்தேர்தலில் இழப்பு ஏற்படும் ஆபத்துள்ளது.

இந்நிலையில் சமாஜ்வாதியின் கூட்டணிக் கட்சிகளில் ஒன்றான ராஷ்ட்ரிய லோக் தளம் (ஆர்எல்டி) தலைவர் ஜெயந்த் சவுத்ரி நேற்று ஆஸம்கானின் மனைவியான முன்னாள் எம்.பி தன்ஜீம் பாத்திமா, மகன் ஆஸம் அப்துல்லா எம்எல்ஏ ஆகியோரை சந்தித்து பேசினார்.

குடும்ப நண்பர்

இந்த சந்திப்புக்கு பிறகு ஜெயந்த் சவுத்ரி கூறும்போது, “லக்கிம்பூர் கெரியின் முக்கிய சாட்சிகளில் ஒருவர் ராம்பூரில் இறந்துவிட்டார். இவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்லவே இங்கு வந்தேன். இத்துடன், மூன்று தலைமுறைகளாக எங்கள் குடும்ப நண்பரான ஆஸம்கானின் வீட்டுக்கும் சென்றேன். சமாஜ்வாதி கட்சியின் ஜனநாயக நடவடிக்கைகளில் நான் தலையிட விரும்பவில்லை” என்றார்.

இடைத்தேர்தல்…

ஜெயந்த் சவுத்ரி இவ்வாறு கூறினாலும், இடைத்தேர்தலில் சமாஜ்வாதி கட்சி வெல்லும் பொருட்டு ஆஸம்கான் குடும்பத்தினருடன் சமாதானம் பேசவே, அகிலேஷின் தூதுவராக சென்றதாக கூறப்படுகிறது.

ஏற்கெனவே, அகிலேஷ் சிங் யாதவின் சித்தப்பாவும் பிரகதிஷீல் சமாஜ்வாதி கட்சியின் தலைவருமான ஷிவ்பால் சிங் யாதவ், பாஜக பக்கம் சாயத் தொடங்கியுள்ளார். மற்றொரு கூட்டணிக் கட்சியான சுஹல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியின் தலைவர் ஓம் பிரகாஷ் ராஜ்பரும் இதே நிலையில் இருப்பது அகிலேஷுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.