இந்தூர்: திருமணம் செய்து கொள்வதாக கூறி இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் காங்கிரஸ் எம்எல்ஏவின் மகன் மத்திய பிரதேசத்தில் கைது செய்யப்பட்டார். மேலும் முன்ஜாமீன் மனு தொடர்பான மோசடி புகாரில் மற்ெறாரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டம் பட்நகர் காங்கிரஸ் எம்எல்ஏ முரளி மோர்வாலின் மகன் கரண் மோர்வால் (33). இவர் கடந்தாண்டு பிப்ரவரி 13ம் தேதி, இளம்பெண் (25) ஒருவரிடம் தான் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் எம்ஜி சாலை போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். இதையறிந்த கரண் மோர்வால், வெவ்வேறு நீதிமன்றங்களில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் ெசய்திருந்தார். அதில், ‘பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறும் நாளில், நான் பட்நகரின் சிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தேன்’ என்று கூறினார். அதற்கான ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். தொடர் விசாரணையில், கரண் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள் அனைத்தும் போலியானது என்றும் மோசடியாக தயாரிக்கப்பட்டது என்றும் உறுதியானது. அதையடுத்து அவரது முன்ஜாமீன் மனுவை இந்தூர் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கரண் மோர்வாலுக்கு எதிராக மற்றொரு வழக்கும் பதிவும் செய்யப்பட்டது. பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்யப்பட்டு ஆறு மாதங்கள் கடந்த நிலையில், போலீஸ் தன்னை கைது செய்யப்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு வெவ்வேறு நீதிமன்றத்தில் முன்ஜாமீன் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தற்போது மோசடி வழக்கு கூடுதலாக கரண் மோர்வால் மீது தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் 26ம் தேதி நடந்த பாலியல் பலாத்கார வழக்கில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் கூறினர்.
