உக்ரைன் நாட்டு அதிபருடன் அமெரிக்க பார்லி., சபாநாயகர் பேச்சு| Dinamalar

ஜபோரிஜியா-உக்ரைன் – ரஷ்யா இடையிலான போருக்கு மத்தியில், உக்ரைன் சென்ற அமெரிக்க பார்லிமென்ட் சபாநாயகர் நான்சி பெலோசி, அந்நாட்டு அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கியை சந்தித்துப் பேசினார்.

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனுக்குள் நுழைந்து இரண்டு மாதங்களுக்கும் மேலாக ரஷ்ய படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். தற்போது, நாட்டின் கிழக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில், ரஷ்ய படையினர் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகின்றனர்.துறைமுக நகரமான மரியுபோலில் ஸ்டீல் ஆலை அமைந்துள்ள பகுதி மட்டும் உக்ரைன் ராணுவம் வசம் உள்ளது. அங்கு, 2,000க்கும் அதிகமான உக்ரைன் வீரர்களும், 1,000க்கும் மேற்பட்ட மக்களும் உள்ளதாக கூறப்படுகிறது.

மரியுபோலை கைப்பற்றுவதில் ரஷ்யா உறுதியாக இருக்கும் நிலையில், அங்குள்ள மக்களை வெளியேற்றும் பணியில், ஐ.நா., குழுக்கள் ஈடுபட்டுள்ளன. ஸ்டீல் ஆலை உள்ள பகுதியில் இருந்து, 20க்கும் மேற்பட்டோரை வெளியேற்றியதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதைத்தவிர, 46 பேரை ரஷ்ய ராணுவம் வெளியேற்றி உள்ளதாகவும் கூறப்படுகிறது

.இதற்கிடையே ரஷ்யா மீது கடும் பொருளாதார தடைகளை விதித்து வரும் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள், உக்ரைனுக்கு ராணுவ ஆயுதங்களை வழங்கி உதவிகளையும் செய்து வருகின்றன. தங்கள் ஆதரவை தெரிவிக்கும் விதமாக, உக்ரைனுக்கு நேரில் சென்று, அதிபர் ஜெலன்ஸ்கியை சர்வதேச தலைவர்கள் சந்தித்து வருகின்றனர்.இந்நிலையில் அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி, நேற்று உக்ரைன் தலைநகர் கீவுக்கு சென்றார். அங்கு ரஷ்ய தாக்குதலில் சேதமடைந்த பகுதிகளை பார்வையிட்ட பெலோசி, பின், அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்துப் பேசினார்.

அந்த சந்திப்பில், அமெரிக்க எம்.பி.,க்கள் சிலரும் உடனிருந்தனர்.உக்ரைனில் ஹாலிவுட் நடிகைபோர் நடந்து வரும் உக்ரைனுக்கு, பிரபல ஹாலிவுட் நடிகையும், அகதிகளுக்கான ஐ.நா., அமைப்பின் சிறப்பு துாதருமான ஏஞ்சலினா ஜோலி, 46, பயணித்துள்ளார்.

நேற்று முன்தினம் லீவ் நகரில் உள்ள ஒரு சிற்றுண்டி கடைக்கு சென்ற அவரை, அங்கிருந்த மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.பின், அங்குள்ள ரயில் நிலையத்திற்கு சென்ற அவர், அங்கு தஞ்சமடைந்திருந்த மக்களுடன் கலந்துரையாடினார். அங்கிருந்த குழந்தைகளுடன் ஏஞ்சலினா ஜோலி குழுவாக புகைப்படம் எடுத்து மகிழ்ந்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.