கிரிப்டோ கரன்சியில் ₹1.44 கோடியை இழந்த காவலர்கள்; அவசர சுற்றறிக்கை அனுப்பிய கமிஷனர்!

வேலியே பயிரை மேய்ந்தது எனச் சொல்லி கேட்டிருக்கிறோம். ஆனால் இங்கு பயிர் வேலியை பதம் பார்த்திருக்கிறது. கிரிப்டோ கரன்சியில் காவல் துறையைச் சேர்ந்த இரண்டு அதிகாரிகள் ரூ.1.44 கோடி முதலீடு செய்து ஏமாற்றம் அடைந்திருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து `இனி சமூக வலைதள விளம்பரங்களை நம்பி கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்ய வேண்டாம்’ என்று போலீசாருக்கு சென்னை கமிஷனர் சங்கர் ஜிவால் அவசர சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறார்.

அதில், “கடந்த 10.9.2021 அன்று காவலர் ஒருவர் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் ஈடுபட்டு தான் பணியின் மூலம் ஈட்டிய ஊதியம் மற்றும் சேமிப்புகளை இழந்து தன்னுடைய இன்னுயிரையும் நீர்த்துள்ளார்.  இதுபோன்ற தீய பழக்கங்களில் ஈடுபடக் கூடாது என்று ஏற்ககெனவே அறிவுறுத்தப்பட்டிருந்தது.

Cyber Crime – Representational image

தற்போது பொதுமக்களை திசை திருப்பி கடின உழைப்பின் மூலம் பெற்ற ஊதியத்தையும் அதன் சேமிப்பையும் `கிரிப்டோ கரன்சி’ மற்றும் அதனை சார்ந்த முதலீடுகளில் அதிக லாபம் ஈட்டலாம் என சமூக வலைதளங்களில் விளம்பரப்படுத்தப்பட்டு அதில் முதலீடு செய்ய வைக்கின்றனர். சமீப காலமாக சில காவலர்கள் தங்களை கிரிப்டோகரன்சி முதலீட்டில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு பணியில் கவனமின்றி, பணம் மற்றும் சேமிப்பையும் இழந்து தனது இன்னுயிரையும் மாய்ந்துக் கொள்ளக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் காவலர்கள் குடும்பங்கள் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் ஆதரவற்ற சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு வாழ்வாதாரம் இன்றி தவிக்கின்றனர்.

உதாரணமாக, நமது காவல்துறையில் பணிபுரியும் 2 காவலர்கள் மற்றும் அவர்களை சார்ந்த நபர்கள் டெலிகிராம், இதர சமூக வலைதளங்களின் மூலம் பரவிய குறுஞ்செய்தியால் ஈர்க்கப்பட்டு ஆன்லைன் `பிட் காயின் டிரெடிங்’ மூலம் கிரிப்டோ கரன்சியில் முறையே ரூ.20.67 லட்சம் மற்றும் ரூ.1.24 கோடி என பல தவணையில் முதலீடு செய்து தாங்கள் ஏமாற்றப்படுகிறோம் என்பதனை கூட அறியாமல் இருந்திருக்கிறார்கள்.

கமிஷனர் சங்கர் ஜிவால்

பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய காவலர்களே இது கிரிப்டோ கரன்சி முதலீட்டில் பணத்தை முதலீடு செய்து ஏமாற்றத்துக்கு உள்ளாவது ஏற்புடையது அல்ல. எனவே, மாவட்ட, சிறப்பு பிரிவு ஒருங்கிணைப்பு ஆய்வாளர்கள் தங்கள் மாவட்டத்தில், தனிப்பிரிவுகளில் பணிபுரியும் கடைநிலை காவலர்கள் வரை `கிரிப்டோகரன்சி’ முதலீடு குறித்து மட்டுமல்லாமல் இதுபோன்ற ஏமாற்றும் முதலீட்டுத் திட்டங்கள் குறித்த வழிகாட்டுதல்கள் அந்தந்த காவல் நிலைய வாட்ஸ்அப் குழு மூலமாக சென்றடைவதை உறுதிப்படுத்த வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

மக்களுக்கும், மக்களின் நிதிக்கும் பாதுகாப்பு தரக்கூடிய காவலர்கள் இது போல ஏமாற்றப்படுவது இன்னும் மக்களுக்கு அச்சத்தைதான் ஏற்படுத்துகிறது. `தன் கையே தனக்கு உதவி’ என்பது போல சம்பாதிக்கும் பணத்தை மக்கள் பத்திரமாக பார்த்துக் கொள்வதும், சரியான முதலீடுகளில் முதலீடு செய்து பணத்தை பெருக்கிக் கொள்வதும் அவரவரது கடமையே!.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.