உஜ்ஜெயின்-‘மதுக்கடையில் வாங்கி குடித்த கலப்பட மதுவால் போதை ஏறவில்லை’ என அளித்த புகார் மீது நடவடிக்கை எடுப்பதாக, மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த கலால் துறை கமிஷனர் உறுதி அளித்துள்ளார்.
ம.பி.,யில், முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுஹான் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது.இங்குள்ள உஜ்ஜெயின் மாவட்டத்தின் பகதுார் கஞ்ச் பகுதியை சேர்ந்தவர் லோகேஷ் சேதியா, 42; வாகன கட்டண நிறுத்துமிடம் குத்தகைக்கு எடுத்து நடத்தி வருகிறார். இவர் அளித்துள்ள புகார் விபரம்:கடந்த 20 ஆண்டுகளாக மது குடித்து வருகிறேன். கடந்த மாதம் 12ம் தேதி, பகதுார் கஞ்ச் பகுதியில் உள்ள மதுக்கடையில், நான்கு ‘குவார்ட்டர்’ வாங்கினேன்.
அதில் இரண்டு பாட்டில்களை நானும், நண்பரும் அருந்தினோம். துளியும் போதை ஏறவில்லை. 20 ஆண்டு களாக மது குடிப்பதால், அதன் சுவை, தரம் உள்ளிட்டவை நன்கு பரிச்சயம். அன்றைய தினம், என்னிடம் கலப்பட மதுவை விற்றுள்ளனர். மீதமுள்ள இரண்டு பாட்டில்களை திறக்காமல் ஆதாரத்திற்காக அப்படியே வைத்துஉள்ளேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இந்த புகார் மனுக்களை, ம.பி., உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா மற்றும் உஜ்ஜெயின் கலால் துறை கமிஷனர் இந்தர் சிங் தாமோர் ஆகியோருக்கு அனுப்பி வைத்தார்.இவரது புகார் குறித்து விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக, கலால் துறை கமிஷனர் கூறினார்.
Advertisement