புதுடெல்லி: பாஜக யுவ மோர்ச்சா பிரிவின் தேசிய செயலாளர் தஜிந்தர் சிங் பக்கா. கடந்த மார்ச் மாதம் நடந்த கூட்டத்தில் பேசிய பக்கா, டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக ஆம் ஆத்மியை சேர்ந்த சன்னி சிங் பஞ்சாப் போலீஸில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில், நேற்று முன்தினம் டெல்லி சென்ற பஞ்சாப் போலீஸார், வீட்டிலிருந்த பக்காவை கைது செய்து பஞ்சாபுக்கு அழைத்துச் சென்றனர்.
இதனிடையே, பஞ்சாப் போலீஸார் தனது மகனை கடத்தி செல்வதாக அவரது தந்தை டெல்லி போலீஸில் புகார் அளித்தார். இதையடுத்து, பஞ்சாப் போலீஸார் மீது கடத்தல் வழக்கு பதிவு செய்தனர். டெல்லி போலீஸார் கொடுத்த தகவலின் பேரில் ஹரியாணா போலீஸார் பக்காவை அழைத்து சென்ற காரை தடுத்து நிறுத்தினர். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அங்கு சென்ற டெல்லி போலீஸாரிடம் பக்கா ஒப்படைக்கப்பட்டார். பின்னர் போலீஸார் அவரை நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர். அப்போது பக்காவை விடுவிக்க நீதிபதி உத்தரவிட்டார்.
கைது செய்ய உத்தரவு
இந்த விவகாரம் தொடர்பான மனுவை நேற்று விசாரித்த மொஹாலி மாவட்ட நீதிமன்றம், தஜிந்தர் சிங் பக்காவுக்கு எதிராக ஜாமீனில் வெளியில் வர முடியாத கைது வாரன்ட் பிறப்பித்தது. தன் மீதான புகார் குறித்து விசாரிக்க தஜிந்தர் ஒத்துழைக்க மறுத்து வருவதால், அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என நீதிபதி ரவ்தேஷ் இந்தர்ஜித் சிங் உத்தரவிட்டார்.
இதனிடையே, தஜிந்தர் சிங் பக்கா நேற்று கூறும்போது, “என்வீட்டுக்கு வந்த பஞ்சாப் போலீஸார் கைது வாரன்ட்டை காண்பிக்கவில்லை. 8 போலீஸார் என்னைபிடித்துக் கொண்டனர். தலைப்பாகை, காலணியை அணிந்து கொள்ள அனுமதி கோரினேன். அனுமதிக்கவில்லை. என்னை கைது செய்வதற்காக 50-க்கும்மேற்பட்ட போலீஸார் என் வீட்டுக்கு வந்தனர். தீவிரவாதியைப் போல என்னை நடத்தினர். கேஜ்ரிவாலை விமர்சித்தால் இதுதான் கதி என்ற தகவலை சொல்ல அவர்கள் முயற்சிக்கின்றனர்” என்றார்.