தக்கலை அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் அரசு ஊழியரின் 11-சவரன் தாலிச் சங்கிலியை பரித்துச் சென்ற மர்ம நபர்கள் சாலை விபத்தில் சிக்கி ஒருவர் பலி மற்றொருவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில் தாலிச் சங்கிலியும் மீட்கப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் அருமனை பகுதியைச் சேர்ந்தவர் நட்சத்திர பிரேமிக (39). இவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊராட்சி ஒன்றியங்களின் செயற்பொறியாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், நேற்றிரவு பணியில் இருந்த அவர் பணியை முடித்து இன்று காலை தனது இருசக்கர வாகனத்தில் தக்கலை, மூலச்சல் வழியாக வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவரை பின் தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த இரு மர்ம நபர்கள் நட்சத்திர பிரேமிக கழுத்தில் கிடந்த 11-சவரன் தாலி சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பியோடினர். இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த பிரேமிக, படுகாயங்கைளுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், புகாரின் அடிப்படையில் தக்கலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே கேரளா மாநிலம் திருவனந்தபுரம் அருகே நடந்த சாலை விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற சஜாத் என்பவர் உயிரிழந்த நிலையில், கமல் என்பவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட அவரிடம் அறுந்த நிலையில் தங்கச் சங்கிலி இருப்பதைக் கண்ட திருவனந்தபுரம் போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தினர்.
கன்னியாகுமரி மாவட்டம் மூலச்சல் பகுதியில் வைத்து பிரேமிக-விடம் தாலிச் சங்கிலியை பறித்துக் கொண்டு கேரளாவிற்கு தப்பிச் சென்ற நிலையில் விபத்தில் சிக்கியது தெரியவந்தது. இதனையடுத்து கேரளாவிற்குச் சென்ற தக்கலை போலீசார் 11-சவரன் தாலிச் சங்கிலியை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
