சென்னை: கேரள மாநிலம் காசர்கோடு அருகேயுள்ள செருவத்தூரில், ஓர் உணவகத்தில் ஷவர்மா சாப்பிட்ட பள்ளி மாணவி தேவநந்தா உயிரிழந்தார். அவர் சாப்பிட்ட ஷவர்மாவில் ‘ஷிகெல்லா’ என்ற பாக்டீரியா இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, தமிழகம் முழுவதும் ஷவர்மா விற்பனை செய்யும் கடைகளில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தநிலையில், தமிழகம் முழுவதும் ஷவர்மா உள்ளிட்ட இறைச்சி உணவுகளை விற்பனை செய்யும் உணவகங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்க உணவுப் பாதுகாப்புத் துறை முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி கூறியதாவது: ஆடு, கோழி உள்ளிட்ட, சமைக்காத இறைச்சிகளை முறையாகப் பதப்படுத்த வேண்டும். அவ்வாறு பதப்படுத்தாமல் நீண்டநேரம் வெளியில் வைத்திருந்தால், சால்மோனெல்லா, ஷிகெல்லா, ஈகோலை உள்ளிட்ட பாக்டீரியாக்கள் உருவாக வாய்ப்புள்ளது. இவ்வாறு பாக்டீரியாக்கள் உருவாகி, கெட்டுப்போன இறைச்சி சாப்பிட்டால், உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே, சமைக்காத இறைச்சிகளை -18 டிகிரி செல்சியஸில் வைக்க வேண்டும். அப்போதுதான் அந்த இறைச்சி கெட்டுப்போகாமல் இருக்கும். இறைச்சியில் பாக்டீரியா இருந்தாலும், குறிப்பிட்ட செல்சியஸில் சமைக்கும்போது பாக்டீரியாக்கள் அழிந்து விடும்.
எனவே, இறைச்சியால் செய்யக்கூடிய அசைவ உணவுகள் 70 டிகிரி செல்சியஸில் சமைக்க வேண்டும்.
இறைச்சியை நீண்ட நாட்களுக்கு வைத்திருக்காமல், உடனுக்குடன் பயன்படுத்தி விற்பனை செய்ய வேண்டும். இறைச்சியில் செயற்கை வண்ணங்களை சேர்க்கக் கூடாது. ஷவர்மாவை கடைக்கு வெளியே வைத்து விற்பனை செய்யக் கூடாது. உணவகங்களில் இறைச்சிகளை -18டிகிரி செல்சியஸில் முறையாக வைக்க வேண்டும் என்பனஉள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை உணவங்களுக்கு விதிக்க முடிவு செய்துள்ளோம்.
இந்தக் கட்டுப்பாடுகளை துண்டுப் பிரசுரங்களாக அச்சிட்டு, உணவகங்களுக்கு விநியோகம் செய்ய உள்ளோம். தொடர்ந்து, உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் மூலமாக தொடர் ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளோம்.
இதில், கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்காத உணவகங்களுக்கு நோட்டீஸ் வழங்கி, நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.