சென்னை: கோயம்பேடு சந்தையில் வரத்து குறைவு காரணமாக கடந்த ஒரு மாதமாக தக்காளி விலை உயர்ந்து வருகிறது. கடந்த சில தினங்களாக மொத்த விலையில் கிலோ ரூ.60 வரை விற்கப்பட்டு வந்தது. தற்போது வரத்து அதிகரித்துள்ள நிலையில் தக்காளி விலை கிலோ ரூ.45 ஆக குறைந்துள்ளது.
மற்ற காய்கறிகளான பீன்ஸ் ரூ.40, பாகற்காய், கத்தரிக்காய், கேரட் தலா ரூ.20, உருளைக்கிழங்கு ரூ.19, பீட்ரூட், நூக்கல் ரூ.18, புடலங்காய் தலா ரூ.15, முட்டைக்கோஸ், முருங்கைக்காய், முள்ளங்கி தலா ரூ.10, வெங்காயம் ரூ.14, சாம்பார் வெங்காயம் ரூ.10 என விற்கப்பட்டு வருகிறது.
தக்காளி விலை குறைந்திருப்பது தொடர்பாக கோயம்பேடு மலர், காய், கனி அங்காடி வியாபாரிகள் நலச் சங்கத் தலைவர் எம்.தியாகராஜன் கூறும்போது, “தக்காளி வரத்து ஒருசில நாட்களில் ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. இதன் காரணமாக வரத்து குறையும்போது விலை அதிகரிக்கிறது. வரத்து ஓரிரு லோடுகள் அதிகமாக இருந்தால் விலை குறைகிறது. நேற்று சரக்கு அதிகமாக வந்ததால் விலை சற்று குறைந்திருந்தது” என்றார்.