புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட 2 நீதிபதிகள் பதவியேற்றுக் கொண்டதை அடுத்து உச்சநீதிமன்றம் மீண்டும் 34 நீதிபதிகளுடன் முழு பலத்தை எட்டி உள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா தலைமையிலான நீதிபதிகள் யு.யு.லலிதா, கான்வில்கர், சந்திரசூட், நாகேஸ்வரராவ் அடங்கிய கொலிஜியம், கவுகாத்தி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சுதன்ஷு துலியா, குஜராத் உயர் நீதிமன்ற நீதிபதி பர்திவாலா ஆகியோரை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க பரிந்துரை செய்தது. இதை ஒன்றிய சட்ட அமைச்சகம் ஏற்றுக் கொண்டு, உயர் நீதிமன்ற நீதிபதிகள் 2 பேரையும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமித்து நேற்று முன்தினம் உத்தரவு பிறப்பித்தது. இதைத் தொடர்ந்து, 2 புதிய நீதிபதிகளும் இன்று பதவியேற்று கொண்டனர். வழக்கமாக பதவியேற்பு விழா உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் நீதிமன்ற அறையில் நடைபெறும். ஆனால், இம்முறை, உச்ச நீதிமன்றத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஆடிட்டோரியத்தில் இன்று காலை பதவியேற்பு விழா நடைபெற்றது. சுதன்ஷு துலியா, பர்திவாலா ஆகியோரை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக தலைமை நீதிபதி ரமணா பதவிப் பிரமாணம் செய்து செய்துவைத்தார். உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்ற பா்தீவாலா, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக உயா்வு பெறவும், 2 ஆண்டுகளுக்கு அந்தப் பதவியில் நீடிக்கவும் வாய்ப்பு உள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. நீதிபதி சுதான்ஷு துலியா, உத்தரகண்ட் உயா்நீதிமன்றத்திலிருந்து உச்சநீதிமன்ற நீதிபதியாக உயா்வு பெறும் 2-வது நீதிபதியாவாா். இரு நீதிபதிகள் பதவியேற்பின் மூலம் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் உச்சநீதிமன்றம் மீண்டும் 34 நீதிபதிகளுடன் முழு பலத்தை எட்டி உள்ளது.
