சென்னையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்க கூட்டம் – அனுமதியின்றி நடத்தியதாக அனைவரும் கைது

சென்னை தி.நகர் பென்ஸ்பார்க் ஹோட்டலில் “நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வு கூட்டம்” இன்று நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது. அங்கு கடைசி நிமிடத்தில் அனுமதி மறுக்கப்பட்டதால் மயிலாப்பூரில் உள்ள திராவிடர் விடுதலை கழக அலுவலகத்தில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. 50க்கும் மேற்பட்ட ஈழத்தமிழ் ஆதரவாளர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். இந்நிகழ்வு தமிழகத்தில் முதல்முறையாக நடைபெற்றது. உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் ஈழத்தமிழர்கள் இணைய வழியாக பங்கேற்றனர்.
image
இணைய வழியாக கூட்டத்தில் பங்கேற்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வாழ்த்துரை வழங்கினார். நிகழ்வில் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ “2009 மே 16 ஆம் நாள் தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதங்களை மவுனிக்கிறோம் என்று சொன்னார்கள். வழிமுறைகளை மாற்றுகிறோம் என்று தேசியத் தலைவர் பிரபாகரன் சொன்னார். அப்படியான மாற்று முறை தான் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்.
ஒரு அரசு இப்படித்தான் இருக்க வேண்டும் என்று முன்மாதிரியான ஒரு அரசாக பிரபாகரனின் அரசு இருந்து வந்தது. ஆனால் லட்சக்கணக்கான ஈழத்தமிழர்கள் இனப்படுகொலைக்கு ஆளாக்கப்பட்டார்கள். இதற்கு நீதி வேண்டும். ஈழத்தில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் மட்டும் தான் ஈழத்தமிழர்களுக்கு நீதியை பெற்றுத் தரும். இதை ஆரம்பம் முதல் சொல்லி வருபவன் நான் மட்டும் தான் என்ற பெருமிதம் எனக்கு உண்டு.
சுதந்திர தமிழீழம் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டது. ஆனால், வல்லரசு நாடுகள் தங்கள் சுயலாபத்திற்காக சிங்களர்களுக்கு ஆயுதங்களைக் கொடுத்து ஈழம் அமையாமல் தடுக்கிறார்கள். ஆயுதம் இன்றி தமிழ் ஈழம் அமைந்தே தீரும். முத்துக்குமார் உள்ளிட்ட 18 பேர் தங்களைத் தீயில் தள்ளிக் கொண்டு ஈழத்திற்காக மாண்டார்கள். தமிழீழ விடுதலைக்கு எந்தெந்த வகையில் பக்க பலமாக இருக்க வேண்டுமோ அந்தந்த வகையில் பலமாக இருப்போம். சுதந்திர தமிழீழம் அமைய பாடுபடுவோம்.” என்று பேசினார்.
image
கூட்டத்தை நடத்த அனுமதி இல்லை என மயிலாப்பூர் காவல் உதவி ஆணையர் தெரிவித்ததன் அடிப்படையில் நிகழ்வை தொடர்ந்து நடத்த காவல்துறையினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் எதிர்ப்பை மீறி கூட்டம் தொடர்ந்து நடைபெற்றது. இதையடுத்து தமிழ்தேசிய விடுதலை இயக்க பொதுச் செயலாளர் தியாகு, தமிழ் தேசிய மக்கள் முன்னணியைச் சேர்ந்த செந்தில் உள்ளிட்ட கூட்டத்தில் பங்கேற்றவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். ஜனநாயக உரிமை மறுத்து அராஜத்தில் ஈடுபடுவதாக காவல்துறையை கண்டித்து கைது செய்யப்பட்டவர்கள் முழக்கமிட்டனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.