“தேசிய அளவில் பாஜகவை எதிர்த்து போராடுவது காங்கிரசால் மட்டுமே முடியும். சித்தாந்தம் இல்லாத மாநில கட்சிகளால் இந்த போராட்டத்தை நடத்தவே முடியாது” என்று, திமுக மத்தியில் ஆட்சியைப் பிடிக்க முடியாது என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறார் ராகுல்காந்தி.
இன்று லண்டனில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்ற காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல்காந்தி, திராவிட முன்னேற்றக் கழகத்தை குறிப்பிட்டு தனது கருத்தினைப் பதிவு செய்துள்ளார்.
‘இந்தியாவிற்கான யோசனைகள்’ என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசிய ராகுல் காந்தி தெரிவித்ததாவது,
“தற்போது பணபலத்தாலும், அதிகார பலத்தாலும் ஊடகங்களை பாஜக விலைக்கு வாங்கிவிட்டது. நாட்டு மக்களின் குரல் நசுக்கப்பட்டு வருகிறது. மக்களின் குரலை, கருத்துகளை பாதுகாக்க காங்கிரஸ் கட்சி தொடர்ந்து பாடுபட்டுக் கொண்டிருக்கிறது.
மாநில கட்சிகளை காங்கிரஸ் கட்சி மதிக்கிறது. மாநில கட்சிகளுடன் இணைந்து காங்கிரஸ் கட்சி செயல்படும். இது ஒரு சித்தாந்த அடிப்படையில் நடக்கும் போர்.
திராவிட முன்னேற்றக் கழகத்தை தமிழ் அரசியல் அமைப்பாக நாங்கள் மதிக்கிறோம். ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு தான் தேசிய அளவில் சித்தாந்தம் உள்ளது. தேசிய அளவில் பாரதிய ஜனதா கட்சியை எதிர்த்துப் போராடுவது என்பது காங்கிரஸ் கட்சியால் மட்டுமே முடியும். சித்தாந்தம் இல்லாத மாநில கட்சிகளால் இந்தப் போராட்டத்தை நடத்த முடியாது” என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
ஆக………….., மத்தியில் ஆட்சியை பிடிக்க மாநில கட்சிகளால் (திமுக உட்பட) முடியாது என்கிறாரே ராகுல்காந்தி என்று, சமூகவலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது.