போக்ரோவ்ஸ்க் : உக்ரைனை சேர்ந்த மரியுபோல் நகரம் முழுமையாக ரஷ்ய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது. கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, பிப்., 24ல் ரஷ்யா போர் தொடுத்தது. மூன்று மாதங்களாக நடந்து வரும் போரில், முக்கியமான மரியுபோல் நகரை கைப்பற்றி விட்டதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
இது குறித்து, ரஷ்ய ராணுவ செய்தி தொடர்பாளர் இகோர் கோனான்ஷென்கோவ் கூறியதாவது:மரியுபோல் நகரை ரஷ்ய ராணுவம் கைப்பற்றி விட்டது. இது ரஷ்யாவின் மிகப் பெரிய வெற்றியாகும். மரியுபோல் நகரின் பிரமாண்ட ‘அஜோவ்ஸ்டால் ஸ்டீல்’ ஆலையில் உள்ள சுரங்கத்தில் உக்ரைன் ராணுவ வீரர்கள் பதுங்கியிருந்தனர்.
கடந்த இரண்டு நாட்களில், இங்கிருந்த 2,439 உக்ரைன் ராணுவத்தினர், ரஷ்யாவிடம் சரண் அடைந்துள்ளனர். ஒரு சிலர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். சிலர் தனி முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

உக்ரைன் – ரஷ்யா இடையிலான போரில், இதுவரை, 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்த வெற்றி வாயிலாக ரஷ்ய ராணுவத்தினர் மாஸ்கோவில் இருந்து கிரீமியா வழியாக, மரியுபோல் நகரை சுலபமாக அடைந்து விடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement