Instant Medu Vadai in tamil: மழைகாலத்தில் சூடான ஸ்நாக்ஸ் சாப்பிட ரொம்பவே நன்றாக இருக்கும். இந்த தருணத்தில் “மெதுவடை” ஒரு அற்புதமான ஸ்நாக்ஸ். இதற்காக நீங்கள் அதிகம் மெனக்கெட தேவையில்லை. உங்கள் வீட்டில் இட்லி தயார் செய்ய வைத்திருக்கும் மாவு போதுமானது.
தவிர, இந்த மெதுவடை நமக்கு பல ஆரோக்கிய நன்மைகைளயும் தருகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வடை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இவற்றோடு மருத்துவ குணங்கள் நிறைந்த பொருட்களை சேர்த்து செய்யும்போது மெதுவடை இன்னும் ஆரோக்கியம் நிறைந்ததாக இருக்கிறது.

இப்போது இட்லி மாவில் இன்ஸ்டன்ட் மெதுவடை எப்படி தயார் செய்யலாம் என்று பார்க்கலாம்.
இன்ஸ்டன்ட் மெதுவடை தேவையான பொருட்கள்:-
இட்லி மாவு – 2 கப்
வெங்காயம் – 1 கப்
பச்சை மிளகாய் – 2
இஞ்சி – ஒரு துண்டு
ரவை – 3 டேபிள் ஸ்பூன் (வறுத்தது)
அரிசிமாவு – 2 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
இன்ஸ்டன்ட் மெதுவடை சிம்பிள் டிப்ஸ்:
முதலில் புளித்த மாவை ஒரு அகலமான பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும். பின்னர் அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து மிக்ஸ் செய்துகொள்ளவும்.
தொடர்ந்து அதனுடன் வறுத்த ரவை மாவு, அரிசிமாவு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்துக்கொள்ளவும்.
நாம் சேர்த்துள்ள இவற்றை நன்றாக கையால் மிக்ஸ் செய்து கொள்ளவும்.
மாவை வடைக்கு ஏற்ற பதத்தில் கலந்து கொள்ளவும்.
தொடர்ந்து அடுப்பில் ஒரு காடாய் வைத்து எண்ணெய் சூடேற்றவும்.
அதன்பிறகு கையில் தண்ணீர் தொட்டு மாவை சிறுசிறு உருண்டைகளாக எடுத்து கையில் வைத்து தட்டி எண்ணெய்க்குள் போடவும்.
நன்றாக வேகும் வகையில் அதனை திருப்பிவிடவும். வடை பொன்னிறமானதும் எடுத்து விடவும். வடையை மிதமான சூட்டில் வைத்து பொரித்து எடுக்கவும். அதிக சூடு வைக்கும் போது அவை கருக வாய்ப்புள்ளது.
இப்போது நீங்கள் எதிர்பார்த்த சுவையான மொறுமொறு மெதுவடை தயாராக இருக்கும். அவற்றை தேங்காய் அல்லது தக்காளி சட்னியுடன் ருசித்து மகிழவும்.