டெல்லியில் இந்திய அளவிலான டிரோன் திருவிழாவைத் தொடக்கி வைத்த பிரதமர் மோடி, வளர்ச்சித் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து டிரோன்களின் உதவியுடன் ஆய்வு செய்யப் போவதாகத் தெரிவித்துள்ளார்.
டெல்லி பிரகதி மைதானத்தில் இன்றும் நாளையும் இந்திய அளவிலான டிரோன் திருவிழா நடைபெறுகிறது. டிரோன் திருவிழாவைத் தொடக்கி வைத்த பிரதமர் மோடி, ரிமோட் மூலம் டிரோன்களை இயக்கும் பயிற்சி பெற்ற 150 பேருக்குச் சான்றிதழ்களையும் வழங்கினார்.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, டிரோன் தொழில்நுட்பம் பற்றிய ஆர்வம் இந்தியாவில் அதிகரித்துள்ளது, பெருமளவில் வேலைவாய்ப்பை உருவாக்கும் துறையாக இது வளரும் என்பதைக் காட்டுவதாகத் தெரிவித்தார்.
அரசின் திட்டங்கள் கடைக்கோடி வரை சென்று சேர்வதை உறுதிப்படுத்துவதற்குத் தொழில்நுட்பம் பாதை வகுத்துள்ளதாகக் குறிப்பிட்டார். பாதுகாப்பு, பேரிடர் மேலாண்மைத் துறைகளில் டிரோன்களின் பயன்பாடு அதிகரிக்கும் எனத் தெரிவித்தார்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் வளர்ச்சித் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து டிரோன்களின் உதவியுடன் மாதந்தோறும் அரசு அதிகாரிகளுடன் ஆய்வு செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் பேசிய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, இந்தியாவில் 270 டிரோன் நிறுவனங்கள் உள்ளதாகவும், 2026ஆம் ஆண்டுக்குள் இந்தத் துறை 15 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வளர்ச்சியடையும் என்றும் தெரிவித்தார்.