காம்பவுண்ட் சுவரில் பொருத்தியிருந்த கிரில் கேட்டை ராம்நாத் திறந்தபோது க்ரீச்.. க்ரீச்சென சப்தம் எழுப்பியது கேட்..
உள்ளே ஹாலில் ஈஸிசேரில் அமர்ந்து பகவத்கீதையின் சாரம் என்ற புத்தகத்தில் லயித்திருந்த சங்கர சாஸ்திரிகள்… கிரில் கேட்டின் சப்தம் கேட்டு இவன்தான் வருவானென்று யூகித்து சட்டென எழுந்து வந்து மெயின்டோர் நிலைப்படியை அடைத்துக்கொண்டு நின்றுகொண்டார்.
அப்பா நிலைவாசல்படியை அடைத்துக்கொண்டு நிற்பதைப் பார்த்தபடியே.. உட்புறமாய் தாளிட்டிருந்த வராண்டா கிரில் கேட்டின் தாழ்ப்பாளை உள்புறம் கைவிட்டுத் நீக்கி வராண்டாவில் கால்வைத்தான் ராம்நாத்.
“ஏய்.. அங்கியே நில்லு.. எங்க போய்ட்டு வர.. எல்லா எடத்துக்கெல்லாம் போய்ட்டு அப்பிடியே உள்ளவரத்துக்கு இது ஒன்னும் ஹோட்டலோ ஹாஸ்டலோ இல்ல.. தினம் அக்னிஹோத்ரம் பண்ற புனிதமான ஆசார அநுஷ்டானங்கள கடைபிடிக்கிற கிருஹம்டா.. கிருஹசாரம் புடிச்சவனே..”
கத்த ஆரம்பித்தார் சங்கர சாஸ்திரிகள்..
“அப்பா… இல்லப்பா..”
“என்னடா இல்ல..நொள்ள..”
கணவரின் கத்தல் கொல்லையில் வாழை இலை நறுக்கிக் கொண்டிருந்த கோமதிமாமியின் காதில் விழ.. அப்பாவுக்கும் பிள்ளைக்குமான வாக்குவாதம் தீவிரமாகிவிடாமல் தணிக்க வேகவேகமாக உள்ளே வந்தார்..

“ஏன்னா இப்பிடி கொழந்தய கரிச்சிகொட்றேள்.. பாவம் அவனே படிச்சுமுடிச்சி மூணுவருஷம் ஆகியும் இன்னும் வேல கெடக்கிலயேன்னு அந்தபரீஷ எழுதரதும் இந்த பரீஷ எழுதரதும்.. பெரிய மனுஷாள பாத்தா காரியம் நடக்குமான்னு கெடந்து அலையறான்.. கொழந்தயப்போயி”
“ஆமாண்டீ.. சின்னக்கொழந்த ஒம்புள்ள..தூளீலபோட்டு ஆராரோ பாடி ஆட்டு.. இவ எங்க போய்ட்டு வரான்னு எனக்குத்தெரியாதா?..
அதா.. ரெண்டு ஃப்ரெண்டு புடிச்சிவெச்சுருக்கானே.. ஃப்ரெண்டு.. ஒத்தன் கறிக்கட புள்ள .. இன்னொருத்தன் டாஸ்மாக் பக்கத்துல வீடு வெச்சிட்டு இருக்கவன்..
“அம்மா.. இப்ப நா உள்ள வரவா.. அப்டியே திரும்பிப் போய்டவா..”
“ குளிக்காமகொள்ளாம உள்ளவரக்கூடாது.. கத்தினார் சாஸ்திரிகள்..”
“சரிடா ராமு.. சைடால கொல்லைப்புறம்..
வந்து குளிச்சிட்டு உள்ளவா..”
அம்மா சொல்ல முணுமுணுத்தவாரே வீட்டைச் சுற்றிக்கொண்டு கொல்லைப்புறம் வந்து தலைக்குக்குளித்தான் ராம்நாத்..
வீபூதியிட்டு அர்க்கியம்விட்டு மாத்யான்னிகம் செய்துவிட்டு உள்ளே வந்தான் ராம்நாத்.. கபகபவென பசித்தது..
“வாடா ராமு தட்டுவெக்கிறேன் சாப்டு..” மகனை வாஞ்சையோடு
அழைத்தார் கோமதிமாமி..
“ ப்ச்..ஒன்னும் புடிக்கிலம்மா..”
“ஏண்டா ராமு அப்டி சொல்ற.. அப்பா திட்றாளேன்னா.. அப்பாதானேடா..”
“புரியறுதும்மா..ஆனாலும் தண்டச்சோறா இருக்கேனேன்னு இருக்குமா..பாரு நம்ம அபர்ணாக்கு கல்யாணம் நிச்சயமாயிருக்கு.. சொந்த தங்க.. அவ கல்யாணத்துக்குன்னு ஒரு அண்ணனா எம்பங்குக்கு பத்துபைசா கூட கொடுக்காம.. ச்சே.. அவமானமா இருக்கும்மா..”
ஆதங்கத்தோடும் வேதனையோடும் பேசும் பிள்ளையைப் பார்க்க வருத்தமாயும் வேதனையுமாய் இருந்தது கோமதிமாமிக்கு..
“அட போடா அசடு.. ஆத்துபொண்ணுக்கு கல்யாணம் பண்ணிட்டா அத்தோட முடிஞ்சிடுதா என்ன எல்லாமும்.. அதுக்கப்பறமும் எத்தன விசேஷம் வைபவம் இருக்கு.. கல்யாணம் பண்ணிக்குடுத்த பொண்ணுக்கு பொறந்தாத்துல செய்ய அடுத்தடுத்து விசேஷமா வராது.. நீ ரெண்டு கையாலயும் வேணது சம்பாதிக்கப்போற.. தங்கைக்கு செய்யதாம்போற..”
பிள்ளையின் தலையில் கைவைத்து முடியைக்கோதி சமாதானம் செய்தார் கோமதி மாமி..
சாப்பிட உட்கார்ந்தவன்.. “அப்பா சாப்டாச்சாம்மா..நீம்மா..”
“இவன் கேட்டது ஹாலில் இருந்த சாஸ்திரிகள் காதில் விழ.. தொரை சாப்டட்டும் அப்பறம் நான் சாப்டறேன்” என்றார்..
நக்கலாக அப்பாசொல்வது புரிந்தது ராம்நாத்துக்கு.. ஆனாலும் ரோஷப்பட்டு ஆகப்போவது ஒன்றுமில்லை.. அப்பாவும் பாவம்தான்.. அப்பாவுக்கு குடும்பச் சுமையை தனியாளாய் சுமந்துசுமந்து அலுத்துவிட்டது.. பிள்ளை படித்துமுடித்து வேலைக்குப் போய் சம்பாதிக்க ஆரம்பித்தால் தன் சுமை கொஞ்சம் குறையுமே என்ற எதிர்பார்ப்பு.. தன் எதிர்பார்ப்பு ஈடேறுவது அவ்வளவு எளிதல்ல என்று தோன்ற ஆரம்பிக்க.. அது கோபமாய் வெடித்துவெளிவர ஆரம்பித்திருக்கிறது.. அதோடுகூட கொஞ்சம் பழமையில் ஊறிய மனம்… ஆசாரம்.. அனுஷ்டானம் என்று ஒருவட்டத்திற்குள் வளைய வருபவர்.. அவருக்கு தன் மகன் முஸ்லீமான ரஹீமோடும் கிறிஸ்டியனான ராபர்ட்டோடும் நட்பாயிருப்பதைக் கொஞ்சமும் ஜீரணிக்க முடியவில்லை.. நட்பும் காதலும் மதம் பார்த்தா வருகிறது?..

ஒன்றாம் வகுப்பில் ஏற்பட்ட நட்பு கல்லூரி வரை தொடர்ந்து இன்னமும் தொடர்கிறது.. பொய்யான நட்பாயிருந்தால் சில வருடத்திற்குள்ளாகவே பல்லிளித்துவிடும்.. ஆனால் ராம்-ரஹீம்-ராபர்ட்டின் நட்பு அப்படியில்லை.. “உடுக்கையிழந்தவன் கைபோலே ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு” என்ற குறளின் வரிக்கேற்ற நட்பு.. அப்பா என்றாவது தன் தோழர்களைப் பற்றி அறிந்துகொள்வார் என்ற நம்பிக்கையோடு இருந்தான் ராம்நாத்..
அன்று அம்மன் கோயிலில் சண்டிஹோமம்..வேதம் படித்த விற்பன்னர்கள் நிறையபேர் கூடியிருந்தார்கள்..அவர்களோடு சங்கர சாஸ்திரிகளும் அமர்ந்திருக்க..
“என்ன ஓய் சங்கர சாஸ்திரிகளே..பொண்ணு கல்யாணம் கிட்டத்துல வந்துட்டாப்ல இருக்கு..” இது சுப்புணி சாஸ்திரிகள்..
“ஆமாம்..இன்னும் ஒருமாசம் கூட இல்ல..அம்பாள்தா நல்லபடியா நடத்தி வைக்கனும்..”
“ பேஷா..பேஷா அனுக்கிரஹம் பண்ணுவா..கவலையே படாதீரும்.. ஆமா..புள்ள பிகாம் படிச்சுமுடிச்சு ரெண்டுமூனு வருஷமாயிருக்குமே வேலைக்குன்னா போய்ட்டானா..” சுப்புணி சாஸ்திரிகள் கேட்டு முடிக்க..பதில் சொல்ல வாயெடுத்த சங்கர சாஸ்திரிகளை முந்திக்கொண்டார் அப்பு சாஸ்திரிகள்..
“ஏங்கணும்.. ஒமக்குத்தெரியாதா..கடத்தெருல, அதும் பேரு என்ன..ம்…ஆமா ஆமா..மட்டன் ஸ்டால்..மட்டன் ஸ்டால்..”
“அதென்ன மட்டன் ஸ்டால்.. கசாப்பு கடைன்னு சொல்லுங்காணும் ஸ்வாமி..” இது ராஜு சாஸ்திரி..
“கரெக்ட்டா சொன்னேள்.. அந்த கசாப்புகட ஓனரோட புள்ளயாண்டங்கிட்ட கடேல ஒக்காந்து பேசரதும் சமயத்துல மாமிசம் வாங்க வரவா கிட்ட காசவாங்கி கல்லால போடறதும்..” என்றார்.
“என்னவோ போங்கோ.. பாய்வீட்டு மட்டன் பிரியாணி மணக்கமணக்க இருக்கும்னுசொல்லுவா.. அத்த சாப்டுட்டு ஆத்துக்கு வராத இருந்தா சரி..” இது முத்துகிருஷ்ண சாஸ்திரி..
ஹோஹோவென்று சாஸ்திரிகள் பட்டாளம் சிரிக்க.. அப்படியே குன்றிப்போனார் சங்கர சாஸ்திரிகள்.. கண்களில் கண்ணீர் துளிர்த்தது.. அவமானம் பிடிங்கித்தின்றது.. தலைகுனிந்தார் சங்கரசாஸ்திரிகள்..
ஹோமம் முடிந்ததும் யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் வீடுக்குக் கிளம்பிவிட்டார்..
“ஐயா.. கும்புடறேனுங்க..’’
யாரென்று திரும்பிப் பார்த்தபோது முருகு..
“ம்…’’ என்றார்..பேசும் மனநிலையில் அவர் இல்லையென்றாலும்.. பதில் சொல்லித்தானே ஆகவேண்டும்..
ஐயா..நம்ம சின்னைய்யா சாராயகடைக்கு வேலைக்குப் போய்ட்டாரா.. அங்க பாத்தேன்..
அதிர்ந்தார் சங்கரசாஸ்திரிகள்..
என்ன முருகு பேத்தற தண்ணிகிண்ணி போட்ருக்கியா..
“மெய்யாலுந்தா சொல்றேங்கையா..
இந்தா பாருங்க.. இறுக்கிக் கட்டியிருந்த வேட்டியில் செருகி வைத்திருந்த டாஸ்மாக் சரக்கு பாட்டிலை எடுத்துக் காண்பித்து.. இந்தாபாட்டில வாங்க கடைக்கு போனேன் அங்க தம்பி இருந்துச்சு’’
கொளுத்திப்போட்டுவிட்டு டாஸ்மாக் சரக்கு பாட்டிலைத் திறந்து வாயில் ஊற்றிக்கொண்டான் முருகு..

பற்றி எரிந்தது சாஸ்திரிகள் மனம்..
மனைவி கோமதியிடம் சக சாஸ்திரிகள் ராம்நாத்தைப் பற்றிச் சொன்னவைகளைச் சொல்லிச் சொல்லி தலையிலடித்துக் கொண்டார்..
மதியம் சங்கர சாஸ்திரிகளுக்கும் ராம்நாத்துக்கும் வாக்குவாதம் முற்றியது.
அப்பாவுக்கும் பிள்ளைக்கும் இடையே நடந்த பிரச்சனைகண்டு பயந்து அழுதார் கோமதிமாமி..
“மொஹரம் பண்டிகைக்கு ரஹீமோட அப்பாக்கும் ரஹீமுக்கும் வாழ்த்து சொல்லதான் போனேன்.. அப்போ மட்டன் வாங்கவந்த ஒருத்தர் கொடுத்தபணத்த வாங்கி கைநீட்டி கல்லால போட்டேன்.. யாரோ அதிகப்படுத்தி ஒங்களண்ட சொல்லீருக்கா.. டாஸ்மாக்லாம் நான் போகல, அந்த பக்கம் என் ஃப்ரெண்டு ராபர்ட் வீடு இருக்கு, ரொம்ப முக்கியமான விஷயமா ராபர்ட்ட பாக்கதாம் அங்க போனேன்”
பனமரத்தடீல நின்னு பாலக் குடிச்சாலும் கள்ளுதான் குடிச்சேன்னு சொல்ற ஒலகமிது.. அத நாம மாத்தமுடியாது.. நாமதா பாத்து நடந்துக்கனும்..எப்பேர்ப்பட்ட வமிசமிது.. சீனுவாசதீட்சிதர் வம்சம்னா அதுக்கு எத்தன பெருமதெரியுமா ஒனக்கு.. அந்தப்பெருமய கெடுக்கன்னு எனக்கு புள்ளையா வந்து பொறந்தையா நீ.. ஏன் ஒனக்கு நம்ம மதத்துல.. நம்ம ஜாதீல..ஒரு வெங்கிட்டுவோ ஒரு பட்டாபியோ சிநேகிதனா கெடைக்கிலயா.. கசாப்புகட ரஹீமும்..சிலுவ போடற ராபர்ட்டுந்தான் சேக்காளிங்களா கெடச்சானுங்களா..அவுங்கதா வேணும்னு நெனச்சியானா அவுனுங்க வீட்டுலயே தங்கிடு.. இனிமே இங்க வராத..அப்பிடி ஒங்கம்மாவுக்காக இங்க இருந்தீன்னா எங்கிட்ட பேசாத..சொல்லிவிட்டு நகர்ந்து போனார் சங்கரசாஸ்திரிகள்..
விக்கித்துப்போய் நின்றான் இருபத்துநான்கு வயது ராம்நாத்..
மகள் அபர்ணாவின் திருமணத்துக்கு பதினைந்து நாட்களே இருந்த நிலையில்.. நெருங்கிய சொந்தங்களுக்குப் பத்திரிக்கை வைக்கவென்று தஞ்சாவூர் கிளம்பினார்கள் சாஸ்திரிகளும் கோமதிமாமியும்.. இரவு பத்துமணிக்குள் திரும்பிவிடுவதென்ற தீர்மானத்தோடு அபர்ணாவை அடுத்ததெருவிலிருக்கும் தங்கைவீட்டில் விட்டுவிட்டுக் கிளம்பிப் போக..பத்திரிக்கை வைக்க பெங்களுர் சென்றிருந்த ராம்நாத் இன்னும் திரும்பவில்லை..
திடீரென சூரைக்காற்றும் பெருமழையும் பிடித்துக்கொள்ள இரவு நினைத்தபடி திரும்பமுடியாமல் தஞ்சாவூரில் தங்கும்படியாகிவிட..
விடிகாலை கிளம்பி காலை ஏழுமணிக்கு வீடு திரும்பியபோது.. வீட்டுக்கதவு திறந்து கிடக்க.. அடிவயிறு பதற உள்ளே ஓட..
கல்யாணத்துக்காக வாங்கி வைத்திருந்த தங்க நகைகள், பட்டுப்புடவைகள், மற்ற ஜவுளிகள், வெள்ளிப்பாத்திரங்கள், கல்யாணச் செலவுக்கான மொத்தபணம் அனைத்தும் வழித்தெடுத்துபோல் கொள்ளை போயிருந்தது..
“ஐயோ.. நான் இனிமே என்னபண்ணுவேன்” என்று கதறியபடி வேரற்ற மரம்போல் நெஞ்சைப்பிடித்துக்கொண்டு கீழேசாய்ந்தார் சங்கர சாஸ்திரிகள்..
தனியார் மருத்துவமனை. நினைவின்றி அப்பா படுத்துக் கிடக்கும் அறையின் வாசலிலே கிடந்ந நாற்காலி யொன்றில் தலையில் கைவைத்துக் குனிந்தபடி சோகமாய் அமர்ந்திருந்தான் ராம்நாத்..எதிரில் கிடந்த நாற்காலியில் அம்மா அழுதபடி..
“மிஸ்டர் ராம்நாத்.. ஒங்க அப்பாவுக்கு ஹார்ட்அட்டாக் கொஞ்சம் சிவியர்தான்..ஆரம்ப சிகிச்சைக்கு எண்பதாயிரம் ரூபா கட்டிடுங்க.. சிகிச்சை முடிந்தபிறகு மொத்தமா பில்லுவரும். எப்பிடியும் ஒன்ர கிட்டத்துல வரும்.. மருத்துவமனை நிர்வாகம் கூறியபோது ஆடிப்போனான் ராம்நாத்.. சட்டைப் பாக்கெட்டிலிருக்கும் இருபத்து மூணு ரூபாயைத் தவிற சல்லிக்காசு கிடையாது கையில்.. வீடும் கொள்ளையர்களால் துடைக்கப்பட்டாகிவிட்டது. . பயம் பற்றியது ராம்நாத்தை..பணம் கட்டவில்லையென்றால் அப்பாவைத்தூக்கி வெளியே போட்டுவிட்டால்.. நினைக்கவே நடுங்கியது மனது..

ராம்நாத்..அப்பா எப்டி இருக்காரு என்ற குரல் கேட்டு நிமிர்ந்தபோது ரஹீமின் தந்தை அப்துல் காதரும் ராபர்ட்டின் தந்தை செபாஸ்டியனும் நின்றிருந்தார்கள்..
“அம்மா எல்லாம் கேள்விப்பட்டோம்.. சார்க்கு ஒன்னும் ஆகாது கவலப்படாதீங்க.. சிகிச்சைக்கான பணம்லாம் கட்டியாச்சி..” என்றார்.
செபாஸ்டியன் கோமதி மாமியைப் பார்த்து.. “பொண்ணு கல்யாணத்தப் பத்தி கவலப்படாதீங்கம்மா.. கல்யாணம் ஜாம்ஜாம்னு நடக்கும்” என்றார் அப்துல் காதர்..
“நாங்க இருக்கோம் அதுக்கான ஏற்பாடு செய்ய என்றார்” செபாஸ்டியன். அப்படியே திகைத்துப் போனார்கள் கோமதிமாமியும் ராம்நாத்தும்..
“என்ன சொல்றீங்க அங்கிள்” என்றான் ராம்நாத்.. அப்துல் காதரையும்.. செபாஸ்டியனையும் மாறி மாறிப்பார்த்து..வாயடைத்துப் போய் நின்றிருந்தார் கோமதிமாமி..
“ஆமா ராம்நாத்தம்பி.. தமிழ்நாடு காவல்துறை இன்டர்போல் மாரி திறமையானது.. கட்டாயம் விரைவிலயே ஒங்கவீட்டுல களவு போனதையெல்லாம் மீட்டுடுவாங்க.. அதபத்தி கவலப்படவேண்டாம்.. அதுவரைக்கும் ஒங்க தங்கச்சி கல்யாணம் நின்னுபோயிடுமோன்னு
பயப்படாதிங்க.. குறிச்சதேதியில திருமணம் நடந்தேதீரும்.. அதுக்கு நாங்களாச்சு..”
“அங்கிள்..” மேற்கொண்டு பேசமுடியாமல் தவித்தான் ராம்நாத்.. வார்த்தையின்றித் தவித்தார் கோமதிமாமி..
சிகிச்சைமுடிந்து நல்லபடியாய் மீண்டுவிட்டார் சங்கர சாஸ்திரிகள்..மாலை டிஸ்சார்ஜ் செய்யப்படவிருந்தவரின் படுக்கையின் அருகே அவரின் இருபுறமும் நின்றிருந்தார்கள் ரஹீமும் ராபர்ட்டும்.. இருகைகளாலும் இருவரின் கரங்களையும் பற்றியிருந்தார் சாஸ்திரிகள்.. கண்களில் கண்ணீர் தளும்பியிருந்தது.
எதிரில் நின்றிருந்தான் ராம்நாத்..
“ராம்நாத்.. நா ஒத்துக்கறேன்.. மதம்புடிச்ச மனுஷந்தான் மதத்தையும் சாதியையும் தன்னோட சுயநலத்துக்காக கண்டுபுடிச்சான்.. சத்தியமான வார்த்த..நம்மதேசியக் கொடீல இருக்குற மூணுவர்ணமும் இந்து.. முஸ்லீம்.. கிருஸ்த்துவம் என்கிற மூணு மதங்கள குறிக்கிறதாவும்..நடுவுல இருக்குற சக்கரம் மூணு மதங்களுக் கிடையேயான அன்பையும் இணக்கத்தையும் குறிக்கிறதாகவும் நீ சொன்னது சத்தியமான உண்மை..நா மனசால தெளிஞ்சிட்டேன்..உண்மைய உணர்ந்துட்டேன் ராம்நாத்..”
“அப்பா..ரொம்ப தேங்ஸ்பா..”’ நா தழுதழுத்தது ராம்நாத்துக்கு..
கல்யாண மண்டபம்..மண்டபத்தின் வாசலில் இருபுறமும் நின்றபடி வருபவர்களையெல்லாம் கைகூப்பி வரவேற்றுக்கொண்டிருந்தனர் அப்துல்காதரும் செபாஸ்டியனும்.. மண்டபத்துக்குள் ராம்நாத்துக்குத் துணையாய் ஓடியாடி கல்யாணவேலைகளை கவனித்துக் கொண்டிருந்தார்கள் ரஹீமும் ராபர்ட்டும்..
பக்கத்தில் மனைவி கோமதி நிற்க..மகளை மடியில் இருத்தி கன்னிகாதானம் செய்துகொடுக்கத் தயாராய் அந்தச் சின்ன ஸ்டூலில் முகமும் மனமும் மகிழ வாயெல்லாம் பல்லாய்ச் சிரித்தபடி அமர்ந்திருந்தார் சங்கரசாஸ்திரிகள்.
நாதஸ்வரம் ஆனந்தம்.. ஆனந்தம்.. ஆனந்தமே பாட.. கெட்டிமேளம் டும்.. டும்..டும்மெனக் கொட்டி முழங்கியது.
**மதம் என்னடா மதம்..மதம்..
(அன்பு)மனம்தானடா நிரந்தரம்**
–காஞ்சி.தங்கமணி சுவாமிநாதன்.
காஞ்சிபுரம்.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.