டெல்லி துவாரகா பகுதியில் ஒரு துணிக்கடையில் பணிபுரிந்த 28 வயது பெண் டிண்டர் ஆப் (டேட்டிங் ஆப்) பயன்படுத்தியிருக்கிறார். அதன் மூலம் ஹைதராபாத்தில் வசிக்கும் மோஹக் குப்தா என்ற இளைஞர் அந்தப் பெண்ணுக்கு அறிமுகமாகியிருக்கிறார். அவருடன் தொடர்ந்து டிண்டர் ஆப் வழியாக உரையாடிவந்திருக்கிறார். ஒருகட்டத்தில் இருவரும் தங்கள் தொலைப்பேசி எண்களைப் பகிர்ந்திருக்கின்றனர். அதன் மூலம், தொடர்ந்து தொலைபேசியில் உரையாடிவந்திருக்கின்றனர். இறுதியாக இருவரும் கடந்த மே 30-ம் தேதி சந்திக்க முடிவுசெய்து, மோஹக் குப்தா டெல்லி வந்திருக்கிறார். இருவரும் டெல்லி துவாரகாவில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் அறை எடுத்துத் தங்கியிருக்கின்றனர்.

இந்த நிலையில், அந்தப் பெண் இன்று தன்னை மோஹக் குப்தா பாலியல் வன்கொடுமை செய்துவிட்டதாக டெல்லி துவாரகா காவல் நிலையத்தில் புகாரளித்திருக்கிறார். போலீஸார் இது தொடர்பாக வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டனர். அதில் மோஹக் குப்தா அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தது உறுதியானது. அதையடுத்து அவரை கைதுசெய்வதற்கான முயற்சிகளில் போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

இது தொடர்பாக ஊடகங்களிடம் பேசிய உள்ளூர் காவல்துறையினர், “மோஹக் குப்தா அந்த இளம்பெண்ணை டெல்லியில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றுக்கு வரவழைத்திருக்கிறார். பின்னர் அந்த ஹோட்டலில் அறை எடுத்து, அந்தப் பெண்ணுக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்தை கலந்துகொடுத்திருக்கிறார். அதை அருந்திய அந்தப் பெண் மயக்கமடைந்ததும், மோஹக் குப்தா அவரை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். பின்னர் அங்கிருந்து சென்றுவிட்டார். பாதிக்கப்பட்ட அந்தப் பெண் இது தொடர்பாக காவல்துறையில் புகாரளித்தார். உடனே வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டோம். மோஹக் குப்தாவின் தொலைபேசி எண் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருக்கிறது. அவரைத் தேடி வருகிறோம். விரைவில் கைதுசெய்யப்படுவார்” எனத் தெரிவித்தனர்.