ஒற்றை தலைவலி குணமாக.. தும்பைப்பூ எண்ணெய்க் குளியல்! I மூலிகை ரகசியம் – 9

வெண்மை நிறத்துக்கும் தூய்மை குணத்திற்கும் எடுத்துக்காட்டு சொல்ல நினைத்தால், இனி சட்டென உங்கள் நினைவிற்கு வர வேண்டியது தும்பையின் வெண்ணிற மலராக இருக்கட்டும்!

தும்பை!

தும்பை போன்ற மூலிகைகள் உங்கள் மனதில் இடம்பிடித்துவிட்டால், நிறங்களுக்கான எடுத்துக்காட்டுகளை மூலிகைகளை வைத்தே நீங்கள் சொல்லிவிட முடியும். வண்ணங்கள்… குணங்கள்… என அனைத்தின் மூலமும் மூலிகைகள் உங்கள் வாழ்வோடு பிணைந்திருக்கட்டும்.

கை நிறைய களிமண்ணை அள்ளிக் கொடுத்து, மனதுக்குத் தோன்றும் ஏதாவது ஒரு சிலையை உருவாக்குங்கள் என்று உங்களிடம் கூறினால் பெரும்பாலானோர் உருவாக்குவது பிள்ளையார் சிலைகளாகத் தான் இருக்கும். குற்றம் குறை இருந்தாலும் மகிழ்வு கொடுக்கும் முழுமுதற் கடவுள் ஆயிற்றே!

வழிபாடு

அப்படி உருவான பிள்ளையாருக்குச் சூட்ட, அதிக விலை கொடுத்து வாங்கும் வண்ண வண்ணப் பூக்கள் எல்லாம் தேவையில்லை. தானாகவே ஆங்காங்கே பூக்கும் சின்னஞ்சிறு வெண்மை நிற தும்பைப் பூக்களே போதும். ஆனைமுகத்தானை ஆனந்திக்கச் செய்யும் நம் தும்பை! தூய்மையான வெண்ணிறம் சூடிய தும்பை மலர்களின் அழகில் அவ்வளவு நேர்த்தி!

வாழ்க்கை தத்துவத்தை கூறும் தும்பை

நிறத்தில் வெண்மையுடன் ஒளிரும் தும்பை மலர்களைத் தூய்மைப்படுத்த சிறு பனித்துளி போதும்! கிராமத்துச் சிறுவர்கள் முதன் முதலில் பருகும் இயற்கைத் தேன் பெரும்பாலும் தும்பை மலரிலிருந்தே கிடைக்கப் பெற்றிருக்கும் என்பதை அச்சிறுவர்கள் நன்கறிவார்கள்! நிறத்திலும் தூய்மையிலும் சிறப்பாக விளங்கும் தும்பை மலர்களைப் போல, உங்கள் வாழ்க்கை தத்துவத்தை தூய்மையாக கறையின்றி வெண்மையாக அமைத்துக்கொண்டால், வாழ்க்கை சிறப்பாகும்!

எண்ணெய்

நாம் மறந்த தும்பையும் எண்ணெய்க் குளியலும்

சில பத்தாண்டுகளுக்கு முன்பு வரை எண்ணெய்க் குளியல் என்பது குடும்பமே இணைந்து கொண்டாடும் ஆனந்த நிகழ்வாக நம் கலாசாரத்தில் இருந்தது. சுத்தமான நல்லெண்ணெயில் அரிசியைப் பொரித்து, அதில் தும்பை மலர்களைப் போட்டு லேசாக காய்ச்சி, அந்த எண்ணெயை தலைமுடி குளிர குளிர வருடிவிடும் அன்பையும் அரவணைப்பையும் சமீபமாகப் பார்க்க முடிவதில்லை.

‘எண்ணெய்க் குளியல் ஒத்துக்கலை…’ என்று உருவான வதந்திகளால் எண்ணெய்க் குளியல் எனும் ஆனந்த மருத்துவ நிகழ்வு நம்மை விட்டு ஏறக்குறைய விலகிப் போய்விட்டது. வாரம் இரண்டு முறை எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும் என்பது, வசதிக்கேற்ப தீபாவளிக்கு மட்டும் என்று மாறியது! இன்றைக்கு தலையில் செயற்கை ஷாம்பூகள் தடவி உடனடியாகக் குளித்து, தலை துவட்டி… என குளியலே அவசரகால நடவடிக்கையாக மாறிவிட்டது வேறு கதை!

இதமாக சூடு செய்த நல்லெண்ணெய்… வறுத்த அரிசி பொரி… தும்பைப் பூக்கள்… இந்த எண்ணெய்க் குளியல், உடலை நோயில்லாமல் நலமாக வாழ வைக்கும் நலச்சூத்திரம். நல்லெண்ணெயில் தும்பைப் பூ மற்றும் சிறிது மிளகுத் தூள், ஓமம் சேர்த்துக் காய்ச்சியும் எண்ணெய்க் குளியலுக்குப் பயன்படுத்தலாம். குறிப்பாக ஒற்றைத் தலைவலியை குணமாக்க வழி தேடுபவர்கள் இந்த தும்பைப்பூ எண்ணெய்க் குளியலை முயலலாம்.

தும்பைப் பூக்கள் மட்டுமா… அதன் வேர், இலைகள் என அனைத்துமே மருத்துவ குணம் வாய்ந்தவை! தும்பை இலைகள் நான்கை நன்றாகக் கழுவி அம்மியில் அரைத்துக்கொள்ளவும். அந்த கற்கத்தை துணியில் வைத்து நன்றாகப் பிழிந்து சாறெடுத்து ஐந்து துளிகள் உள்ளுக்குள் விழுங்கினால் மூக்கில் தண்ணீராக வடியும் சளித்தொல்லையில் இருந்து குணம் பெறலாம்.

மூலிகை சாறு (மாதிரிப் படம்)

தும்பை இலைகளை சாறு எடுத்து அந்தச் சாற்றுடன் நல்லெண்ணெய், கொஞ்சம் பெருங்காயம் சேர்த்து சூடாக்கி, ஆற வைத்து சில துளிகள் காதில்விட காதுப்புண் குணமாகும். தும்பை இலைச்சாற்றுடன் சுத்தமான நல்லெண்ணெய் சேர்த்து மூன்று துளிகள் மூக்கில் விட்டால் தலை பாரம், சளித் தொந்தரவுகள் விலகுவதை உணரலாம். தலைவலி, மூக்கில் சதை வளர்ச்சி, சைனசைடிஸ், சளித் தொந்தரவுகளுக்கு, இதன் இலைச் சாற்றை மூக்கில் பிழியும் நசிய மருத்துவ முறை சித்த மருத்துவத்தில் பிரசித்தி பெற்றது.

மழைக்காலம் தொடங்கியவுடன் முதல் வேலையாக சமையலறைக்குள் நுழையுங்கள். தும்பை இலைகளையும் அடிக்கடி சமையலில் சேர்க்கத் தொடங்குங்கள். தும்பையை சமையலில் சேர்ப்பதால் என்ன நன்மை கிடைக்கும் தெரியுமா!… சளி, இருமல், காய்ச்சல் வகைகள் துன்பப்படுத்துவதற்கான வாய்ப்புகள் பெருமளவில் குறையும்.

மூலிகை பானம் (மாதிரி படம்)

தும்பை பானம்

வெயில் காலங்களில் அதிகளவில் நாவறட்சி ஏற்படுகிறதா… இந்த எளிமையான தும்பை பானத்தை முயன்று பாருங்கள். அதிக தாகம் இருக்கும்போது, தும்பையின் பூக்களை தண்ணீரிலிட்டுக் கொதிக்க வைத்து, சிறிது தேன் சேர்த்து பானமாகப் பருக, வறட்சி குறைந்து நா மலரும்!

பேரீச்சம் பழத்தோடு தும்பை பூச்சாறு ஐந்து துளி சேர்த்து சுவைக்க, உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும். தும்பைச் செடியை உலர்த்தி சூரணமாக்கி, நாட்டுச் சர்க்கரை சேர்த்து பாலில் கலந்து சாப்பிட்டு வர, ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும். தும்பை மற்றும் நொச்சி இலைகளைச் சேர்த்து புகைபோட, கொசுக்கள் விலகுவதாகவும் ஆராய்ச்சி தெரிவிக்கிறது. இதிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய்க்கு பாக்டீரியாவளர்ச்சியை தடுக்கும் ஆற்றல் இருக்கிறதாம்.

’டிரைகோபைடான்’ பூஞ்சைக்கு எதிராகச் செயல்பட்டு அதன் பரவலைத் தடுக்கும் திறன் தும்பைக்கு இருப்பதாக ஆய்வுகள் பதிவு செய்கின்றன. இதிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய்க்கு பாக்டீரியா வளர்ச்சியைத் தடுக்கும் ஆற்றல் இருக்கிறது. புற்று நோய் செல்களுக்கு எதிராகச் செயல்படும் தன்மையும் தும்பைக்கு உண்டு.

தும்பை கண்மை

கண்களுக்கு மையிட்டுக் கொள்ளும் வழக்கம் இப்போது ஏறக்குறைய காணாமல் போய்விட்டது. அப்படியே ஆங்காங்கே நடைமுறையில் இருந்தாலும் செயற்கை கண் மையே வணிகச் சந்தைகளில் கிடைக்கிறது. முற்காலங்களில் தும்பை செடியிலிருந்து தயாரிக்கப்பட்ட ’கண்மை’, கண் நோய்களுக்கான மருந்தாகப் பயன்பட்டிருக்கிறது என்பது ஆச்சர்யமான உண்மை.

குளியல்

தும்பைக் குளியல்

வெயில் காலங்களில் உடலில் எரிச்சல் ஏற்பட்டால் தும்பை இலையை அரைத்து உடல் முழுவதும் தேய்த்து ஒரு தும்பைக் குளியல் போட்டுப் பாருங்கள்! எரிச்சல் நீங்கி தேகம் மகிழ்ச்சி அடையும். தலைபாரம், சளி அவதிப்படுத்தும் போது, இதன் இலைகள் மற்றும் மலர்களை சிதைத்து வெந்நீரிலிட்டு மறக்காமல் ஆவி பிடியுங்கள்! தலைபாரத்திற்கு தும்பைப் பூவை சாறுப் பிழிந்து, ஒரு மெல்லிய துணியில் நனைத்து நெற்றியில் பற்றுப் போடலாம்.

இலக்கியங்களில் தும்பை

போரில் கலந்துகொள்ளும் இரு அணி வீரர்களும் தும்பையின் அழகிய பூங்கொத்தை சூடிக்கொள்வார்களாம். போரிடும் இருவருமே தூய்மையானவர்கள் என்பதைக் குறிக்கவே இந்த ஏற்பாடு. எதிராளியும் தூய்மையானவர் என்பதைக் குறிக்க, ’தும்பைப் பகைவர்’ என்கிறார் குமட்டூர் கண்ணனார். ’தும்பை துழாஅய் சுடர்ப்பூந் தோன்றி’ என குறிஞ்சிப்பாட்டில் கபிலர் குறிப்பிடுகிறார்.

துன்பம் போக்கும் தும்பை

தாவரவியல் பெயர்:

Leucas aspera

குடும்பம்:

Lamiaceae

கண்டறிதல்:

இரண்டடி வரை வளரும் சிறுசெடி வகை. தூய்மைக்கு எடுத்துக்காட்டாய்த் திகழும் வெண்ணிற மலர்கள் தும்பைக்கு உரிய அடையாளம். சிறுதும்பை, பெருந்தும்பை ஆகிய வகைகளும் தும்பையில் உண்டு. மழைக் காலங்களில் பரவலாக தும்பை செடிகளைப் பார்க்கலாம்.

தாவரவேதிப் பொருள்கள்:

Triterpenoids, Oleanolic acid, Sitosterol, Leucasperone

தும்பை… நலத்துக்குத் தெம்பு!

– மரு.வி.விக்ரம்குமார்.,MD(S)

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.