உணவு உற்பத்திக்கான தேசிய போராட்டம் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் ,மட்டக்களப்பு மாவட்டத்தில் பணிபுரியும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடனான கலந்துரையாடல் இன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் க.கருணாகரன் தலைமையில் இடம்பெற்றது.
இக் கலந்துரையாடலின் போது எதிர்வரும் காலங்களில் உள்ளூர் உற்பத்தியினை நுகர்வோருக்கு தங்குதடையின்றி வழங்குவதற்கு சமூக பொறுப்புடன் கடைமையாற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுடன் கலந்துரையாடப்பட்டதுடன் அரச சார்பற்ற நிறுவனங்கள் வழங்கும் வாழ்வாதார உதவிகள் மற்றும் வாழ்க்கை தரம் மேம்படுத்தும் செயற்திட்டம் தொடர்பாகவும் இதன் போது விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வறிய கிராமங்களில் வாழும் தெரிவுசெய்யப்பட்ட போசாக்கு குறைந்த சிறுவர்களுக்கு போசாக்கான உணவுகளை வழங்குவதற்கு திட்டமிட்டுள்ளதாக இதன்போது தெரிவிக்கப்பட்டதுடன் மாவட்டத்தில் உற்பத்தியாகும் உணவு பொருட்களை எமது பிரதேசத்திற்குள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
வீட்டுதோட்டம், நன்னீர் மீன் வளர்ப்பு, கால்நடை வளர்ப்பு ஊக்குவிப்பு போன்ற செயற்திட்டங்கள் அரச சார்பற்ற நிறுவனங்களால் நடைமுறைப்படுத்தபட்டு வருகின்றமை தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன் இவ்வாறான செயற்பாடுகளை விரிவுபடுத்த வேண்டுமென்று அரசாங்க அதிபரினால் இதன்போது கோரிக்கை விடுக்கப்பட்டது.
கலந்துரையாடலில் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.சசிகலா புண்ணிய மூர்த்தி மற்றும் உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.ஜதீஸ்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.