போர், வன்முறை பிரச்சினைகளால் உலகளவில் 3.6 கோடி குழந்தைகள் இடம் பெயர்வு – யுனிசெப் அமைப்பு தகவல்

நியூயார்க்: போர், வன்முறை, பருவநிலை மாற்றம், சுற்றுச்சூழல், பேரிடர்கள் போன்றவை காரணமாக 2021-ம் ஆண்டு இறுதி வரை உலகளவில் 3.6 கோடி குழந்தைகள் இடம்பெயர்ந்துள்ளதாகவும், 2-ம் உலகப் போருக்குப்பின் இது மிக அதிகமான அளவு என்றும் குழந்தைகளுக்கான ஐ.நா அமைப்பு யுனிசெப் தெரிவித்துள்ளது.

கடந்த 2021-ம் ஆண்டில் மட்டும் இந்த எண்ணிக்கையில் 22 லட்சம் பேர் அதிகரித்தனர். இடம் பெயர்ந்த குழந்தைகளில் 1 கோடியே 37 லட்சம் பேர் அகதிகள். உள்நாட்டு சண்டை, வன்முறை ஆகியவை காரணமாக 2 கோடி 28 லட்சம் பேர் உள்நாட்டுக்குள் இடம் பெயர்ந்துள்ளனர் எனவும் யுனிசெப் கூறியுள்ளது.

ரஷ்யா-உக்ரைன் போரினால் இடம் பெயர்ந்தவர்கள் உட்பட 2022-ம் ஆண்டில் இடம் பெயர்ந்தவர்கள் இந்த அறிக்கையில் சேர்க்கப்படவில்லை. இவர்களையும் சேர்த்தால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.

ஆப்கானிஸ்தான், காங்கோ, ஏமன் ஆகிய நாடுகளில் ஏற்பட்ட உள்நாட்டு பிரச்சினை, பருவநிலை மாற்றங்களால் ஏற்பட்ட பாதிப்புகள் ஆகியவை இடம் பெயர்ந்த குழந்தைகள் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு காரணமாக அமைந்து விட்டது.

இது குறித்து யுனிசெப் நிர்வாக இயக்குனர் கேத்தரின் ரசல் கூறியதாவது: இடம்பெயர்ந்த குழந்தைகள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இவற்றை அரசுகள் தடுக்க வேண்டும். இடம்பெயர்ந்த குழந்தைகளுக்கு கல்வி, பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் இதர சேவைகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். அகதிகளாக வந்த குழந்தைகளில் பாதி பேர் மட்டுமே ஆரம்பப் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இளம் வயது சிறுவர்களில், கால்வாசிக்கும் குறைவானவர்களே பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர். பெற்றோரைவிட்டு பிரிந்து தனியாக இருக்கும் குழந்தைகள் கடத்தப்பட்டு துஷ்பிரயோகம் செய்யப்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. உலக அளவில் கடத்தப்படுபவர்களில், 28 சதவீதம் பேர் குழந்தைகள். எனவே, அவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும். இவ்வாறு யுனிசெப் நிர்வாக இயக்குனர் கேத்தரின் ரசல் கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.