"இது எவ்வளவு கேவலம்!" – ஓபிஎஸ், திமுகவை கடுமையாக சாடிய எடப்பாடி பழனிசாமி

இன்று நடைபெற்ற சம்பவத்திற்கு முழு பொறுப்பு திமுகவும், துரோகி ஓபிஎஸ்ஸும் தான். அவர் ஒரு சுயநலவாதி. தனக்கு கிடைக்காத பதவி வேறு யாருக்கும் கிடைக்கக் கூடாது என நினைப்பார் என எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக தெரிவித்தார்.

சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கல்வீச்சில் காயமடைந்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிர்வாகிகளை அக்கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து நலம் விசாரித்தார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, தலைமை அலுவலகத்தை சமூக விரோதிகள் கைப்பற்ற நினைக்கிறார்கள் என காவல்துறையில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காதது ஏன் எனக் கேள்வி எழுப்பினார்.
image
“வானகரத்தில் சிறப்பு பொதுக்குழு நடைபெறும் நேரத்தில் கட்சியின் தலைமை அலுவலகத்தில் சமூக விரோதிகள் செல்ல வாய்ப்பு உள்ளது என தகவல் கிடைத்தவுடன் பாதுகாப்பு வழங்க வேண்டும் என ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. தொடர்ச்சியாக இந்த தகவல் வந்ததால் ஜெயக்குமார் மற்றும் பெஞ்சமின் ஆகியோர் காவல் ஆணையர் அலுவலகத்தில் தலைமை அலுவலகத்திற்கு முழு பாதுகாப்பு வழங்க வேண்டும் என புகார் அளித்தனர். 30 ஆண்டுகள் ஆட்சி செய்த பிரதான எதிர்க்கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என தெரிவித்தும் முறையான பாதுகாப்பு வழங்கவில்லை.
AIADMK to name HQ after MGR on golden jubilee || AIADMK to name HQ after  MGR on golden jubilee
பொதுக்குழு கூட்டத்தில் அண்ணன் ஓபிஎஸ் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார். ஆனால் ரவுடிகளை அழைத்து வந்து கட்சி நிர்வாகிகளை தாக்கியது உண்மையில் மன வேதனையை தந்துள்ளது. கட்சியின் நிர்வாகிகளை காப்பாற்ற வேண்டிய ஓபிஎஸ், கட்சியின் ஒருங்கிணைப்பாளர், துணை முதல்வர், முதல்வர் என பதவிகளை வழங்கிய நிர்வாகிகளுக்கு ஓபிஎஸ் இன்று வெகுமதியை தந்துள்ளார். பொதுக்குழு கூட்டத்தில் அவருக்கு இருக்கை வழங்கப்பட்டு இருந்தது. ஆனால் 3 மீன்பாடி வண்டியில் கற்களை எடுத்து வந்து ரவுடிகள் நிர்வாகிகளை தாக்கி உள்ளனர். அதனை தடுக்க வேண்டிய காவல்துறை எதுவும் செய்யாமல் கட்சியின் நிர்வாகிகளை கைது செய்துள்ளனர்.

மேலும் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நிறைவடைந்த பின் கட்சி அலுவலகத்திற்கு வந்து மரியாதை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் திமுகவும் ஓபிஎஸ் உடன் இணைந்து இதனை செயல்படுத்தி உள்ளனர். 30 ஆண்டுகாலம் ஆட்சி செய்த கட்சிக்கே இந்த நிலை என்றால் சாமானிய மக்களின் நிலை என்னவாக இருக்கும் என்பதை நினைத்து பார்த்து இருக்க வேண்டும். இந்த செயலை வன்மையாக கண்டிக்கிறேன். இன்று நடைபெற்ற சம்பவத்திற்கு முழு பொறுப்பு திமுகவும் துரோகி ஓபிஎஸ்ஸும் தான். அவர் ஒரு சுயநலவாதி! தனக்கு கிடைக்காத பதவி வேறு யாருக்கும் கிடைக்கக் கூடாது என நினைப்பார்.
image
காவல்துறை பாதுகாப்போடு வாகனத்தில் அதிமுகவின் ஆவணங்களை அள்ளிச் சென்றுள்ளார். இது எவ்வளவு கேவலம்! காலம் மாறும்., யார் தவறு செய்தாலும் அவர்களுக்கு தக்க பாடம் புகட்டுவோம். நீதிமன்றத்தின் மூலமாக நியாயத்தை பெற்று அதிமுக தலைமை அலுவலகம் மீண்டும் திறக்கப்படும். 98% பொதுக்குழு உறுப்பினர்கள் எங்களுடன் உள்ளனர். எனவே அதிமுக எங்களுடன் வலிமையாக உள்ளது. திமுகவுடன் உறவுடன் உள்ளதால் இந்த நிலைக்கு ஓபிஎஸ் மாறியுள்ளார் ஓபிஎஸ் செயல் கேவலமாக உள்ளது” என தெரிவித்தார் எடப்பாடி பழனிசாமி.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.