இன்னும் பழைய பழனிசாமி மாதிரி நினைச்சுட்டு இருக்கீங்களா? முதல்வர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் சவால்

அதிமுக அலுவலகத்தில் ஓபிஎஸ்-உடன் இணைந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாடகம் நடத்தியிருப்பதாக அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.
பொதுக்குழு கூட்டத்தில் ஏற்புரையாற்றிய எடப்பாடி பழனிசாமி, அதிமுக வலுப்பெற ஒற்றைத்தலைமை அவசியம் என்றார். தனக்கு கிடைக்காத பதவி யாருக்கும் கிடைக்கக் கூடாது என்ற சுயநலத்துடன் ஓபிஎஸ் செயல்பட்டதாகவும் அவர் ஒருபோதும் விட்டுக்கொடுக்கவில்லை என்றும் எடப்பாடி பழனிசாமி சாடினார். திமுக ஆட்சிக்கு வந்தது விபத்து என விமர்சித்த அவர், மீண்டும் அதிமுக ஆட்சியமைக்க பாடுபடுவதே தனது லட்சியம் என்றார்.
image
“அதிமுக தலைமை அலுவலகத்தில் ரவுடிகள் மூலம் கதவை உடைத்து அனைத்து ஆவணங்களையும் ஓபிஎஸ் கொள்ளையடித்து விட்டார். ஓபிஎஸ்-ஐ கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என முதலில் நினைக்கவில்லை. ஆனால் அதிமுக அலுவலகத்தில் அவர் நடந்துகொண்ட விதத்தை பார்த்த பிறகே அம்முடிவை பொதுக்குழு எடுத்திருக்கிறது. சில எட்டப்பர்கள் கட்சியில் இருந்துகொண்டு களங்கம் கற்பித்து கொண்டிருக்கின்றனர். எதிரிகளோடு உறவு வைத்துக் கொண்டிருக்கின்றனர். அதையெல்லாம் அழிக்க, ஒடுக்க, முறியடிக்க வேண்டும் என்றால், ஒற்றைத் தலைமை வேண்டும் என்று முடிவு செய்தீர்கள்.

இப்பிரச்னை துவங்கும்போது மூத்த தலைவர்கள் பலர் அவரிடம் சமாதானம் பேசினார்கள். ஒற்றைத் தலைமைக்கு ஓபிஎஸ் ஒப்புக்கொள்ளவில்லை; இரட்டைத் தலைமையால் பல்வேறு கஷ்டங்கள் ஏற்பட்டன. முதலமைச்சர் ஸ்டாலின், ஓபிஎஸ் இணைந்து அதிமுக அலுவலகத்தில் நாடகம் நடத்தியுள்ளனர். இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். இன்னும் பழைய பழனிசாமி மாதிரி நினைச்சுட்டு இருக்கீங்களா? நடக்காது ஸ்டாலின் அவர்களே! நடக்காது.” என்று கூறினார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.