கேரளாவுக்கு கடத்திய மினி டெம்போ சிக்கியது; 900 லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல்

நித்திரவிளை: கன்னியாகுமரி மாவட்டத்தில் பைபர் படகுகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும் மண்ணெண்ணெயை தமிழக வியாபாரிகள்  வாங்கி கேரளாவிற்கு பல்வேறு வகையான வாகனங்களில் கடத்தி சென்று விற்பனை செய்வது வாடிக்கையாக உள்ளது. இதை அவ்வப்போது காவல்துறையினர் மடக்கி பிடித்து வருவாய்துறையினரிடம் ஒப்படைத்து வருகின்றனர்.இதற்கிடையே நேற்று இரவு சுமார் 9 மணி அளவில் இனையம் பகுதியில் இருந்து  படகிற்கு மானிய விலையில் வழங்கப்படும் மண்ணெண்ணெயை மினி டெம்போவில் ஏற்றி கேரளாவுக்கு கடத்தி செல்வதாக நித்திரவிளை காவல் நிலைய தனிப்பிரிவு ஏட்டு ஜோசுக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவல் நித்திரவிளை காவல் நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சிறப்பு எஸ்ஐ இன்பராஜ் தலைமையில் காஞ்சாம்புறம் தெருவுமுக்கு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மீன்பெட்டியை மேல் பகுதியில் அடுக்கி வைத்துக் கொண்டு போலீசார் எதிர்பார்த்த மினி டெம்போ வந்து கொண்டிருந்தது. அதை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அதில் 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 27 கேன்களில் 900 லிட்டர் மண்ணெண்ணெய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் டிரைவரிடம்  விசாரணை நடத்தினர்.அப்போது இனையம் புத்தன்துறை பகுதியில் இருந்து கேரளாவுக்கு மண்ணெண்ணெயை கடத்தி செல்ல வந்ததாக தெரிவித்தார். இதையடுத்து போலீசார் மினிடெம்போவையும், மண்ணெண்ணையையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவற்றை கிள்ளியூர் தாலுகா வட்ட வழங்கல் அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.