பெங்களூரு : பெங்களூரு மாநகராட்சி மருத்துவமனைகளில், மாதந்தோறும் பிரசவ எண்ணிக்கை 500 ஐ தாண்டியுள்ளது. பச்சிளம் குழந்தைகளை பராமரிக்க, சக்தி கணபதி நகரில் ‘பச்சிளம் சிசுக்கள் பராமரிப்பு சிறப்பு மையம்’ துவங்கியுள்ளது.இது தொடர்பாக, பெங்களூரு மாநகராட்சி சுகாதாரப் பிரிவு அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கொரோனா உட்பட மற்ற தொற்று நோய்கள் பரவியதால், பெங்களூரு மாநகராட்சி மற்றும் அரசு மருத்துவமனைகளில், பிரசவம் பார்த்துக் கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இங்கு தரமான மருத்துவ சேவை கிடைக்கிறது. குறிப்பாக மாநகராட்சி மருத்துவமனைகளில், மாதந்தோறும் 500க்கும் மேற்பட்ட பிரசவங்கள் நடக்கின்றன. தினமும் 24 மணி நேரம், பிரசவ வசதி உள்ளது. ஆனால் ஜெகஜீவன்ராம் நகர், ஸ்ரீராமபுரம், கோவிந்தராஜநகர் மருத்துவமனைகள் உட்பட, பல மருத்துவமனைகளில் பச்சிளம் சிசுக்களை பராமரிக்க, சிறப்பு பிரிவு இல்லை.இதற்கு தீர்வு காணும் வகையில், மஹாலட்சுமி லே — அவுட் சட்டசபை தொகுதிக்குட்பட்ட, சக்தி கணபதி நகரில் பிரசவம் மற்றும் குழந்தைகளின் மருத்துவ சேவைக்காக, மூன்று மாடிகள் கொண்ட, 30 படுக்கைகள் வசதியுள்ள, மல்ட்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டப்படுகிறது.
இங்கு பச்சிளம் சிசுக்கள் பராமரிப்பு சிறப்பு பிரிவு இருக்கும்.மாநகராட்சி மருத்துவமனைகளில், சிறப்பு டாக்டர்களை நியமிக்க வாய்ப்பில்லை. எனவே சிறப்பு டாக்டர்கள், எம்.பி.பி.எஸ்., டாக்டர்கள், செவிலியர்கள், துப்புரவு ஊழியர்கள், டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர், சுகாதார ஆலோசகர்களை நியமிக்கும்படி, அரசின் சுகாதாரத் துறைக்கு கடிதம் எழுதப்பட்டது. மருத்துவமனை கட்டடத்தை, குழந்தைகள் ஆரோக்கிய பிரிவு நோடல் அதிகாரிகள், மற்ற அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர்.சக்தி கணபதி நகரில், ஏற்கனவே மல்ட்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டுமானப் பணிகள் முடிந்துஉள்ளது. படுக்கைகள், அனைத்து மருத்துவ சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன. தேவையான ஊழியர்களை அரசு நியமித்தவுடன், மருத்துவமனை செயல்பட துவங்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement