புதுடெல்லி: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் விஜய் மல்லையாவுக்கு நான்கு மாதம் சிறை தண்டனையும், ரூ.2000 அபராதமும் விதித்து உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பு அளித்தது. பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா பாரத ஸ்டேட் வங்கியில் ரூ.9,000 கோடி கடன் பெற்று இங்கிலாந்து நாட்டிற்கு தப்பி சென்ற நிலையில், பாரத ஸ்டேட் வங்கி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில் எந்த ஒரு பண பரிவர்த்தனையும் மல்லையா மேற்கொள்ளக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் அதை மீறி மல்லையா ரூ.316 கோடி பண பரிவர்த்தனை செய்ததால் அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இதில் மல்லையா குற்றவாளி என உச்ச நீதிமன்றம் அறிவித்தது. வாதங்கள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு மட்டும் தேதி குறிப்பிடாமல் கடந்த மார்ச் மாதம் 10ம் தேதி ஒத்திவக்கப்பட்டது. இந்நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அமர்வு நேற்று தீர்ப்பு வழங்கியது. அதில், ‘‘மல்லையாவுக்கு 4 மாதம் சிறை தண்டனையும், ரூ. 2,000 அபராதமும் விதிக்கப்படுகிறது. நீதிமன்ற உத்தரவை மீறி மல்லையா அவருடைய பிள்ளைகளுக்கு பண பரிவர்த்தனை செய்த ரூ.316 கோடியை வட்டியுடன் திருப்பி செலுத்த வேண்டும். இல்லாவிட்டால் சொத்துக்களை முடக்க நேரிடும்’’ என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
