ராமநாதபுரம்: முல்லைப் பெரியாறு அணையில் முழுக் கொள்ளளவு நீர் தேக்க வேண்டுமெனில் தமிழக அரசு உடனடியாக பேபி அணையை கட்டி பலப்படுத்த வேண்டும் என தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் செ.நல்லசாமி தெரிவித்தார்.
தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு செயலருமான செ.நல்லசாமி ராமநாதபுரத்தில் செய்தியாளர்களிடம் கூறியது: “நாடாளுமன்ற தேர்தல் முதல் உள்ளாட்சி தேர்தல் வரை வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக பணமே இருந்து வருகிறது. இது இந்திய ஜனநாயகத்திற்கு வந்திருக்கும் பேராபத்து. இதன் முடிவு சர்வாதிகாரமாகவே இருக்கும். அரசியல் கட்சியினர் தேவையற்ற இலவச திட்டங்களை அறிவித்து வழங்குவதும், மக்கள் தொகை பெருக்கமும் இலங்கையைப் போல் எதிர்காலத்தில் இந்தியாவிலும் பொருளாதார நெருக்கடி ஏற்படலாம்.
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இன்னும் 5 ஆண்டுகளில் பெட்ரோல் வாகனங்களே இருக்காது என்கிறார். முதலில் விவசாயிகளுக்கான மின்சார டிராக்டர்களை உருவாக்க வேண்டும். மத்திய அரசு இயற்கை விவசாயத்திற்கு மாற சொல்கிறது. மெல்ல மெல்லத்தான் இயற்கை விவசாயத்திற்கு மாற வேண்டும். இல்லையேல் இலங்கைக்கு ஏற்பட்டதுபோல் உணவுப்பஞ்சம் நாட்டில் ஏற்படும்.
நாட்டில் தற்போது உள்ள மெக்காலே கல்வித் திட்டத்தை மாற்ற வேண்டும்.
தமிழக அரசு விரைவில் கள்ளுக்கான தடையை நீக்க வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி வரும் ஆகஸ்ட் 16-ல் சென்னையில் அசுவமேத யாகம் நடத்த உள்ளோம். இந்த விவாதத்தில் கள் போதைப்பொருள் என நிரூபித்தால் ரூ.10 கோடி பரிசாக வழங்குவோம்.
தமிழகத்தில் சாலைகளை செப்பனிடும் போது மரங்களை ஜேசிபி இயந்திரம் கொண்டு அடித்து உடைத்து மரத்தை வீணாக்காமல், ரம்பம் கொண்டு அறுத்து எடுக்க வேண்டும். காவிரியில் மாதாந்திர அடிப்படையிலான நீர் பங்கீடு என்ற அம்சம் தீர்ப்பில் இடம் பெற்றிருக்கும் வரை தமிழகம், கர்நாடகா காவிரியின் வடிகாலாகவே இருக்கும். இதற்கு ஒரே நிரந்தர தீர்வாக தினந்தோறும் நீர் பங்கீடு என்ற அம்சத்தைத் தீர்ப்பில் இடம்பெறச் செய்ய வேண்டும்.
முல்லைப் பெரியாறு அணையின் முழு கொள்ளளவான 152 அடி நீர் தேக்க வேண்டும் என்றால், தமிழக அரசு உடனடியாக பேபி அணையை கட்டி பலப்படுத்த வேண்டும் என்றார்.