ஆகம விதிகளை பின்பற்றும் கோயில்களை அடையாளம் காண ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கடந்த 2020-ம் ஆண்டு தமிழ்நாடு இந்து சமய நிறுவனப் பணியாளர்கள் பணி நிபந்தனை விதிகளின்கீழ் பிறப்பிக்கப்பட்ட அரசாணையின் அடிப்படையில் தமிழக கோயில்களில் அர்ச்சகர்கள் நியமனத்துக்கு தடை விதிக்கக் கோரி மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஜகத்குரு ராமநாத ஆச்சார்யா சுவாமி ராம்பத்ராச்சார்யா ஸ்ரீ துளசி பீட சேவா நியாஸ் உட்பட டெல்லி,உத்தர பிரதேசம் மற்றும் பெங்களூருவைச் சேர்ந்த 8 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகளைத் தொடர்ந்திருந்தனர்.

அதில், “தமிழக கோயில்களில்காலியாக உள்ள அர்ச்சகர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. அதில், ஆகம விதிகளுக்கு எதிராக அர்ச்சகர்கள் பணிக்கு தகுதிகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.

சைவ மற்றும் வைணவ கோயில்களில் அந்தந்த பிரிவினரையே அர்ச்சகர்களாக நியமிக்க வேண்டும். ஆகமவிதிகளுக்கு உட்பட்டே அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளன. எனவே அதன்படியே அர்ச்சகர்களை நியமிக்க உத்தரவிட வேண்டும்”என கோரியிருந்தனர்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி என். மாலா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, “மனுதாரர்கள் எவரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல என்பதால் இந்த வழக்கை தாக்கல் செய்ய அவர்களுக்கு எந்த அடிப்படை உரிமையும் இல்லை” என்றார்.

அதையடுத்து நீதிபதிகள், “தமிழகத்தில் ஆகம விதிகளைப் பின்பற்றும் கோயில்கள் எவை என்பதை அடையாளம் காணும் வகையில் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஒரு மாதத்தில் குழு அமைக்க வேண்டும்” என தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். மேலும், “அந்தக் குழுவில் கோயில் வரலாறு மற்றும் மரபுகள் தெரிந்த நபர்களை உறுப்பினர்களாக நியமிக்க வேண்டும். ஆகமவிதிகளைப் பின்பற்றும் கோயில்களின் பட்டியலை விரைவில் வெளியிட வேண்டும்.

அர்ச்சகர்கள் பணி நியமனத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி நியமனங்கள் நடைபெற வேண்டும்.ஒருவேளை அதில் விதிமீறல்கள் இருந்தால் பாதிக்கப்பட்டவர்கள் வழக்கு தொடரலாம்” எனக்கூறி விசாரணையை தள்ளி வைத்தனர்.

அப்போது தமிழக அரசு தரப்பில், இந்த குழுவுக்கு தலைவராக உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி டி.ராஜுவை நியமிக்கலாம் என அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் யோசனை தெரிவித்தார். அதையடுத்து நீதிபதிகள், இது தொடர்பாகவும் மனுதாரர்கள் பதிலளிக்க வேண்டும், என உத்தரவிட்டுள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.