ஜம்மு: என்னை கடத்தியது யாசின் மாலிக் என்று காஷ்மீர் முன்னாள் முதல்வர் முப்தி முகமதுவின் மகள் ரூபியா ஜம்மு நீதிமன்றத்தில் நேற்று வாக்குமூலம் அளித்தார்.
காஷ்மீரை சேர்ந்த மக்கள் ஜனநாயக கட்சியின் நிறுவனர் முப்தி முகமது. காஷ்மீர் முதல்வர், மத்திய அமைச்சர் உட்பட பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். கடந்த 1989-ம் ஆண்டு அவர் மத்திய அமைச்சராக பதவி வகித்தார். அந்த ஆண்டில் டிசம்பர் 8-ம் தேதி முப்தி முகமதுவின் மகள் ரூபியாவை தீவிரவாதிகள் கடத்தி சென்றனர். அவரை மீட்பதற்காக 5 தீவீரவாதிகள் விடுவிக்கப்பட்டனர். இதன்பிறகு பாதுகாப்பு கருதி தமிழகத்தில் ரூபியா வசித்து வருகிறார். இந்த சூழலில் கடத்தல் வழக்கு ஜம்முவில் உள்ள நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்றது.
விசாரணையில் ரூபியா நேரில் பங்கேற்றார். அப்போது ஜே.கே.எல்.எப். பிரிவினைவாத அமைப்பின் தலைவர் யாசின் மாலிக் உட்பட 4 பேர் தன்னை கடத்தியதாக நீதிமன்றத்தில் அவர் வாக்குமூலம் அளித்தார். யாசின் மாலிக் நீதிமன்றத்தில் காணொலி வாயிலாக விசாரணையில் பங்கேற்றார். அவரை காஷ்மீருக்கு அழைத்து வந்து விசாரணை நடத்த சிபிஐ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.