சரியும் ரூபாய் மதிப்பு… எந்த பொருள்களுக்கு எல்லாம் செலவைக் குறைக்க வேண்டும் ?

உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்திவரும் நிலையில், உலகம் முழுவதுமே பொருளாதார பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக, தங்கம், கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.

கச்சா எண்ணெய் தேவையைப் பொறுத்த வரை, இந்தியா 85% வெளிநாடுகளை நம்பிதான் உள்ளது. விலை ஏற்றத்தால் பணவீக்கம் அதிகரித்து வருவகிறது, இதனால் உலகம் முழுவதுமே பங்குச்சந்தைகள் கடும் சரிவைச் சந்தித்து வருகின்றன.

குறையும் ரூபாய் மதிப்பு… தங்கம், பெட்ரோல் விலை இன்னும் உயருமா?

இந்த சூழலில், பல நாடுகள் தங்கள் முதலீடுகளை டாலர்களில் மாற்றி வருவதால், அதன் மதிப்பு உயர்ந்து, பல நாடுகளின் பண மதிப்பு சரிந்து வருகிறது.

கடந்த சில நாள்களில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு 79-ஆக சரிவடைந்தது.தொடர்ந்து கடந்த வியாழன்று, 1 டாலரின் மதிப்பு 79.99 ரூபாயை எட்டியது. நேற்று வர்த்தகத்தின் துவக்கத்தில் 1 டாலரின் மதிப்பு 79.92 ரூபாயாக சரிந்தது, வர்த்தக இறுதியில் 79.91 ரூபாயாக இருந்தது. அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 80 ரூபாயை நெருங்கியுள்ளது.

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவதால் உடனடியாக இறக்குமதிதான் பாதிப்புக்கு உள்ளாகும். எனவே, இறக்குமதி பொருள்கள் விலை உயரும்.

கடந்த ஜூன் மாதம் இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை இதுவரை இல்லாத அளவுக்கு 2,563 கோடி அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது. வர்த்தகப் பற்றாக்குறை என்பது ஏற்றுமதிக்கும், இறக்குமதிக்கும் இடையே உள்ள வித்தியாசம் ஆகும். இதனால் எலக்ட்ரானிக் பொருள்கள், கச்சா எண்ணெய், வெளிநாட்டு பயணங்கள், வெளிநாட்டுக் கல்வி போன்றவற்றுக்குக் கூடுதல் செலவாகும்.

எனவே, வெளிநாடுகளுக்குப் படிக்கச் செல்லும் இந்திய மாணவர்களின் செலவு அதிகமாகும். சுற்றுலா அல்லது வேறு காரணங்களுக்காக வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும் இந்தியர்கள் பணத்தை டாலர்களாக மாற்றி செலவு செய்யும் போது கூடுதல் பணம் செலவிடும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

ஏற்றுமதி இறக்குமதி

எரிபொருள், சமையல் எண்ணெய், தங்கம் போன்ற பொருள்களின் விலையும் அதிகரிக்கும். மேலும், கார்கள் மற்றும் கைபேசிகள் ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் உதிரி பாகங்களின் விலை அதிகரிக்கும்.

இந்தியாவிலிருந்து பருத்தி ஆடைகள், நகைகள், உணவுப் பொருட்கள், மருந்துகள் மற்றும் தோல் பொருள்கள் அதிகம் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்த ஏற்றுமதியாளர்கள் ஈட்டும் ஒவ்வொரு டாலருக்கும் கிடைக்கும் ரூபாய் மதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்பதால், இவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். டாலரில் ஒப்பந்தம் போட்டு பெற்று, இந்திய ரூபாய்க்கு மாற்றும் ஏற்றுமதியாளர்களுக்கு இந்த சமயம் லாபமாக இருக்கும்.

விலைவாசி ஏற்றம் காணும் பொருள்களை சிக்கனமாகப் பயன்படுத்துவதே இந்த நேரத்தில் சிறந்தது….

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.