செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்கவிழா : பிரதமர் மோடியை நேரில் அழைக்க தமிழக எம்.பி.க்கள் டெல்லி பயணம்

சென்னை : செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைக்க வரும் 19ம் தேதி பிரதமர் மோடியை அழைக்க தமிழக எம்.பிக்கள் டெல்லி செல்கின்றனர்.சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகிற 28ம் தேதி முதல் அடுத்த மாதம் 10ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டியில், 187 நாடுகளை சேர்ந்த 2,000க்கும் மேற்பட்ட சதுரங்க வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இப்போட்டிக்கான தொடக்க விழா மிகப் பிரமாண்டமாக சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் வரும் 28ம் தேதி மாலை நடைபெறுகிறது. செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில், தமிழ்நாட்டின் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தினை உலக மக்கள் அனைவரும் அறியும் வகையில் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். இதற்கான அழைப்பிதழை நேரில் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் அடுத்த வாரம் டெல்லி செல்வதாக இருந்தது. இதற்கிடையில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு திடீர் உடல்நலக்குறைவு (கொரோனா) ஏற்பட்டது. அவர் சிகிச்சைக்காக கடந்த 2 நாட்களாக சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலினை, பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசி, உடல்நலம் குறித்து விசாரித்தார். அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னையில் வரும் 28ம் தேதி துவங்க உள்ள உலக செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு அழைப்பு விடுக்க நானே நேரில் வருவதாக இருந்தது என்பதை குறிப்பிட்டார். தான் தற்போது மருத்துவ சிகிச்சை பெற்று வருவதன் காரணமாக என்னால் நேரில் வர முடியாது. அதனால், தமிழக எம்பிக்கள் தங்களை நேரில் சந்தித்து அழைப்பிதழ் வழங்குவார்கள். அதை ஏற்று, தாங்கள் சென்னை வந்து செஸ் ஒலிம்பியாட் போட்டியை துவக்கி வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதற்கு, பிரதமர் மோடியும் சம்மதம் தெரிவித்துள்ளார்.இதையடுத்து, தமிழக எம்பிக்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் மற்றும் தமிழக தலைமை செயலாளர் இறையன்பு ஆகியோர் வருகிற 19ம் தேதி டெல்லியில், பிரதமர் மோடியை நேரில் சந்திக்க உள்ளனர். அப்போது, செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான அழைப்பிதழை முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பில் பிரதமர் மோடியிடம் நேரில் வழங்குகிறார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.