நாடு முழுவதுமே பல்வேறு மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக அசாம், ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக, மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
அதேபோல் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும், தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாகவும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், சென்னை மற்றும் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் இன்று முதல் இடியுடன் கூடிய கனமழை தொடங்கிவிடும் என்று, தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவரின் முகநூல் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
“மேற்குமலைத் தொடர்ச்சிப் பகுதியில் மழை மெல்ல குறைய குறைய, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை மற்றும் தமிழகத்தின் வட மாவட்டங்கள், இதர உள் மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்பு அதிகரிக்கும்
.
தமிழகத்தில் மேற்கண்ட பகுதிகளில் இனி வரும் நாள்களில், பகலில் நல்ல வெயிலும், தொடர்ந்து இடியுடன் கூடிய மழையும் பெய்யும். இனி இப்படித்தான் பல இடங்களில் நடக்கும்” என்று தெரிவித்துள்ளார்.