வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மும்பை : மஹாராஷ்டிராவில் அவுரங்காபாத் மற்றும் ஓஸ்மனாபாத் நகரங்களின் பெயர்களை மாற்ற, முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது.
மஹாராஷ்டிராவில் சமீபத்தில் நடந்த அரசியல் குழப்பங்களால், சிவசேனாவில் பிளவு ஏற்பட்டது. ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அதிருப்தி குழுவினர், பா.ஜ.,வுடன் இணைந்து ஆட்சியை அமைத்துள்ளனர்.
முதல்வர் பதவியில் இருந்து விலகுவதற்கு முன், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தலைமையிலான அமைச்சரவை குழு, கடந்த மாதம் 28ம் தேதி நடந்தது. அப்போது, அவுரங்காபாத், ஓஸ்மனாபாத் நகரங்களின் பெயர்களை மாற்ற முடிவு செய்யப்பட்டது.
![]() |
சட்டசபையில் பெரும்பான்மை நிரூபிக்கும்படி கவர்னர் உத்தரவிட்டதற்கு பின் அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதால், கடந்த மாதம் நிறைவேற்றப்பட்ட முடிவு சட்ட விரோதமானது என கூறப்படுகிறது. இதையடுத்து இந்த தீர்மானம் மீண்டும் முன்வைக்கப் பட்டு, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான புதிய அமைச்சரவை குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. புதிய அமைச்சர்கள் யாரும் பதவியேற்காததால், இந்தக் கூட்டத்தில், ஏக்நாத் ஷிண்டே மற்றும் பா.ஜ.,வைச் சேர்ந்த துணை முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் ஆகிய இருவர் மட்டுமே பங்கேற்றனர். பெயர் மாற்றத்திற்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அதன்படி அவுரங்காபாத் நகரம், சத்ரபதி சம்பாஜி நகர் என்றும், ஓஸ்மனாபாத் நகரம், தாரசிவ நகர் என்றும் அழைக்கப்படும். இதேபோல், புதிதாக அமைக்கப்பட உள்ள நவி மும்பை சர்வதேச விமான நிலையத்துக்கு, சிவசேனா கட்சியின் மறைந்த மூத்த தலைவர் டி.பி. பாட்டீல் பெயர் வைக்கவும் அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement