கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே தனியார் பள்ளி மேல்தளத்திலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட மாணவியின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் உள்ளிட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கனியாமூர் பகுதியில் உள்ள அந்த மேல்நிலைப் பள்ளியின் விடுதியில் தங்கி 12ஆம் வகுப்பு படித்துவந்த மாணவி, பள்ளியின் 3ஆவது தளத்திலிருந்து கீழே குதித்து உயிரை மாய்த்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது. மாணவியின் மரணத்திற்கு பள்ளி நிர்வாகமே காரணம் எனக்கூறி அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் கள்ளக்குறிச்சி நான்கு முறை சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
பள்ளி நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், மாணவியின் உடலை மறு கூராய்வு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அதுவரை உடலை வாங்கப் போவதில்லை என்றும் அவர்கள் கூறி வருகின்றார்கள். அவர்களுடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அப்போது மறியலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் காணப்படுகிறது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM