சென்னை: தமிழகத்தைச் சேர்ந்த 234 சட்டமன்ற உறுப்பினர்களும் தங்களது வாக்குகளை செலுத்திய நிலையில், குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது.
நாட்டின் 15-வது குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது. சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் வாக்குப்பதிவு செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை இந்த வாக்குப்பதிவு நடைபெற்றது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது வாக்கை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து, தமிழக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், திமுக தோழமை கட்சி உறுப்பினர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.
அதேபோல், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி பகல் 2.30 மணிக்கு தனது வாக்கை செலுத்தினார். அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களும் தங்களது வாக்குகளை செலுத்தினர்.
இதேபோல், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஈரோடு கணேசமூர்த்தி, நாகப்பட்டினம் செல்வராஜ், மற்றும் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று சென்னையில் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.
மாலை 4 மணிக்கு சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் தனது வாக்கைப் பதிவு செய்தார். அதேபோல், 4 மணிக்கு பின்னர், கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பால்வளத்துறை அமைச்சர் நாசர், ஆம்புலன்ஸ் மூலம் வந்து தனது வாக்கை செலுத்தினார். இறுதியாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முழுகவச உடையணிந்து தனது வாக்கைப் பதிவு செய்தார்.
இதனைத் தொடர்ந்து வாக்குப்பெட்டிகள் சீலிடப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விமானம் மூலம் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. வரும் 21-ம் தேதி இந்த வாக்குகள் எண்ணப்படவுள்ளன.