ரியோ டி ஜெனிரோ:பிரேசிலில், போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 18 பேர் உயிரிழந்தனர்.தென் அமெரிக்க நாடான பிரேசிலின் ரியோடி ஜெனிரோ நகருக்கு அருகேயுள்ள பகுதியில், கார் திருட்டு, வங்கி கொள்ளை, கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் பதுங்கிஉள்ளதாக போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, போலீஸ் படையினர் சம்பவ இடத்திற்கு ஹெலிகாப்டரில் விரைந்து அதிரடி தாக்குதல் நடத்தினர். விலா குரூசிரோ என்ற இடத்தில் மறைந்திருந்த கடத்தல்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இந்த தாக்குதலில், 18 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து, ரியோ டி ஜெனிரோ கவர்னர் கிளாடியோ காஸ்ட்ரோ கூறுகையில், ”குற்றவாளிகளில் பலர் போலீஸ் உடையணிந்து தாக்குதல் நடத்தினர். இதையடுத்தே, போலீசார் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். நாங்கள் குற்றங்களுக்கு எதிராக தொடர்ந்து போராடுவோம். மக்களுக்கு அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் பணியிலிருந்து பின்வாங்க மாட்டோம்,” என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement