பனாஜி: தனது மகள் சட்ட விரோத பார் நடத்தி வருவதாக குற்றம்சாட்டிய காங்கிரஸ் தலைவர்கள், நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்,’ என்று ஸ்மிருதி இரானி நோட்டீஸ் அனுப்பி உள்ளார். ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானியின் மகள் ஜோயிஷ் இரானி, கோவாவில் உள்ள அசாகோவில் ‘சில்லி சோல்ஸ் கோவா’ என்ற பெயரில் உணவகத்துடன் கூடிய மது பாரை சட்ட விரோதமாக நடத்தி வருவதாக காங்கிரஸ் தலைவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். மேலும், கடந்தாண்டு மே மாதமே இறந்து விட்ட ஒருவரின் பெயரில் ஆவணங்களை சமர்பித்து, இதற்கான உரிமத்தை அவர் பெற்றிருப்பதாகவும் கூறியுள்ளனர். இதற்கு கண்டனம் தெரிவித்த ஸ்மிருதி இரானி, ‘எனது மகள் 18 வயதான கல்லூரி மாணவி. சோனியா, ராகுல் காந்தியின் ரூ5,000 கோடி கொள்ளை, நேஷனல் ஹெரால்டு வழக்கு குறித்து நான் பேசியதால், எனது மகள் குறிவைக்கப்படுகிறார்’ என்று குற்றம்சாட்டினார். இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து பேசிய காங்கிரஸ் தலைவர்கள் பவன் கேரா, ஜெய்ராம் ரமேஷ், நெட்டா டிசோசா ஆகியோர், நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஸ்மிருதி இரானி நேற்று வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
