புதுடெல்லி: ‘காவிரி ஆணையத்தின் கூட்டத்தில் மேகதாது குறித்து ஆகஸ்ட் 10ம் தேதி வரை விவாதிக்க கூடாது,’ என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை விவகாரம் பற்றி விவாதிக்க கர்நாடகா அரசுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என தமிழக அரசு தொடர்ந்த வழக்கை கடந்த 20ம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்றம், இதற்கு பதில் மனு தாக்கல் காவிரி ஆணையம், தமிழகம், கர்நாடகா அரசுகளுக்கு உத்தரவிட்டது. அதன்படி, தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், ‘காவிரி படுகையில் புதிய திட்டங்களை நிறைவேற்றக் கூடிய எந்த தகுதியும் கர்நாடகாவுக்கு கிடையாது,’ என தெரிவித்துள்ளது. இந்த வழக்கு நீதிபதிகள் ஏ.எம்.கன்வீல்கர், அபாய் மற்றும் பரிதிவாலா அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஒன்றிய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஐஸ்வர்யா பட்டி, ‘இந்த வழக்கில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் சார்பாக ஆஜராக இருந்த சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, கொரோனா தொற்றால் மருத்துவ பரிசோதனையில் உள்ளார். மேலும், இந்த வழக்கு தொடர்பாக ஆணையத்தின் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யவும் அவகாசம் வேண்டும்,’ என கோரினார். அப்போது குறுக்கிட்ட தமிழக அரசின் வழக்கறிஞர்களான முகுல் ரோத்தகி, உமாபதி மற்றும் குமணன் ஆகியோர், ‘விசாரணையை ஒத்திவைக்கும் பட்சத்தில், ஆணையத்தின் அடுத்த கூட்டத்தில் மேகதாது குறித்து விவாதிக்கவோ, முடிவு எடுக்கவோ அனுமதிக்க கூடாது,’ என நீதிபதிகளிடம் தெரிவித்தனர்.இதை ஏற்ற நீதிபதிகள், ‘வழக்கை ஆகஸ்ட் 10ம் தேதிக்கு ஒத்திவைக்கிறோம். இந்த இடைப்பட்ட காலத்தில் காவிரி ஆணையம் தனது பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும். இதற்கு இடைப்பட்ட காலத்தில் காவிரி ஆணைய கூட்டம் நடந்தால், அதில் மேகதாது குறித்து விவாதிக்கக் கூடாது. இது தொடர்பாக ஏற்கனவே விதிக்கப்பட்ட தடை தொடரும்,’ என உத்தரவிட்டனர்.
