புதுடெல்லி: ரயில்களில் மூத்த குடிமக்களுக்கு மீண்டும் பயண கட்டண சலுகை வழங்கப்பட உள்ளது. நாடு முழுவதும் ரயில்களில் கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட, மூத்த குடிமக்களுக்கான பயண கட்டண சலுகை மீண்டும் வழங்காததால், ஒன்றிய அரசு சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது. இந்நிலையில், நிறுத்தப்பட்ட இந்த சலுகையை மூத்த குடிமக்களுக்கு மீண்டும் வழங்க ரயில்வே பரிசீலித்து வருகிறது. ஆனால், இந்த சலுகைகளில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. கொரோனாவுக்கு முன்பு வரையில், 58 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு 50 சதவீதமும், 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு 40 சதவீதமும் கட்டண சலுகை அளிக்கப்பட்டது. ஆனால், இப்போது 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு மட்டுமே இந்த கட்டண சலுகையை வழங்க பரிசீலிக்கப்பட்டு வருகிறது. அதோடு, பொது மற்றும் சிலிப்பர் பெட்டிகளில் பயணிக்க மட்டுமே அனுமதி அளிக்கப்பட உள்ளது. அனைத்து ரயில்களுக்கும் ‘பிரிமீயம் தட்கல்’ திட்டத்தை அமல்படுத்தவும் ரயில்வே பரிசீலித்து வருகிறது. இதன்மூலம், ரயில்வேக்கு அதிக வருவாய் கிடைக்கும்.
