சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா இன்று நடக்கிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் 42-வது பட்டமளிப்பு விழா, சென்னை கிண்டி வளாகத்தில் உள்ள விவேகானந்தர் அரங்கில் இன்று காலை 10 முதல் 11.30 மணி வரை நடைபெற உள்ளது. இந்த விழாவில் தலைமை விருந்தினராக பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்கிறார். அவருடன் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க. ஸ்டாலின், உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் துறை அதிகாரிகள் உட்பட பலர் பங்கேற்கின்றனர்.
பல்கலை. அளவில் பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்பட்ட 69 மாணவர்களுக்கு பிரதமர் மோடி, பதக்கங்களை வழங்க உள்ளார். மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை ஆளுநர் வழங்குகிறார். முதல்வர் சிறப்புரை ஆற்றுகிறார். விழாவில் பிரதமர் பங்கேற்பதால் பல்கலை. வளாகம் மற்றும் அதைச் சுற்றிய பகுதிகளில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை 13-ம் தேதி நடைபெற்ற மதுரை காமராஜர் பல்கலை. பட்டமளிப்பு விழாவில் ஆளுநரின் சிறப்பு அழைப்பாளராக மத்திய அமைச்சர் எல்.முருகன் பங்கேற்றார். விழா அழைப்பிதழில் உயர் கல்வி அமைச்சர் பொன்முடியின் பெயருக்கு மேல் எல்.முருகனின் பெயர் இடம்பெற்றது. இதனால், பட்டமளிப்பு விழாவை அமைச்சர் பொன்முடி புறக்கணித்தார்.
எனவே இந்த முறை எல்.முருகன், பொன்முடி ஆகியோர் பெயரை சரிசமமாக போட்டு, பல்கலைக் கழகம் தரப்பில் அழைப்பிதழ் தயாரிக்கப்பட்டுள்ளது.