ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் பணம் இழந்தவர் தற்கொலை| Dinamalar

அரூர்: அரூர் அருகே, ‘ஆன்லைன் ரம்மி’ சூதாட்ட விளையாட்டில் பணத்தை இழந்த, தனியார் நிறுவன ஊழியர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த முத்தானுாரை சேர்ந்தவர் பிரபு, 36; தனியார் கிரானைட்ஸ் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணிபுரிந்தார்.இவரது மனைவி பிரமிளா, 32. இந்த தம்பதிக்கு மகள், மகன் உள்ளனர். ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஆர்வம் காட்டிய பிரபு அதற்கு அடிமையாகி, பல லட்சம் ரூபாயை இழந்து கடன் சுமைக்கு ஆளாகினார்.
மேலும், பிரபுவுக்கு லாட்டரி சீட்டு வாங்கும் பழக்கமும் இருந்துள்ளது. நேற்று முன்தினம் ஆன்லைன் ரம்மி விளையாட்டில், 45 ஆயிரம் ரூபாயை பிரபு இழந்துள்ளார். இதனால் மனஉளைச்சலில் இருந்த அவர், நேற்று மாலை, 6:00 மணிக்கு வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பொன்னேரி வி.ஏ.ஓ., ராஜா, அரூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அரூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

மின்சாரம் பாய்ந்து மாணவர் பலி

மானாமதுரை : சிவகங்கை மாவட்டம், கொம்புக்காரனேந்தல் அரசு மேல்நிலை பள்ளி மாணவர்கள் அருகில் உள்ள நாவல் மரத்தில் ஏறி பழம் பறிக்கும் போது, மின்சாரம் பாய்ந்து, மாணவர் பலியானார்.
சீனிமடையை சேர்ந்த மருதுபாண்டி என்பவர் மகன் மனோஜ் 13; ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். கொம்புக்காரனேந்தல் பள்ளியில் படித்து வந்தார். நேற்று மதிய உணவு இடைவேளையில் மாணவர்கள் சிலர் பள்ளிக்கு அருகில் உள்ள நாவல் மரத்தில், பழம் பறிக்க ஏறியுள்ளனர். கூட்டமாக மரத்தில் மாணவர்கள் ஏறியதால், மரம் வேருடன் சாய்ந்து அருகில் இருந்த மின் கம்பிகள் மீது விழுந்தது. இதில், மாணவர்கள் மீது மின்சாரம் பாய்ந்தது.இதில், சம்பவ இடத்திலேயே மனோஜ் பலியானார். மிளகனுார் கந்தசாமி மகன் விக்னேஸ்வரன் 15, பலத்த காயத்துடன், சிவகங்கை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். மானாமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.

விபத்தில் சிக்கிய எம்.எல்.ஏ.,: விலா எலும்பு முறிந்தது

அந்தியூர்: அந்தியூர் அருகே நடந்த கார் விபத்தில், தி.மு.க., – எம்.எல்.ஏ.,வுக்கு விலா எலும்பு முறிந்தது.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் தி.மு.க.,- எம்.எல்.ஏ., வெங்கடாச்சலம், 60; மாமல்லபுரத்தில் நடக்கும் ‘செஸ் ஒலிம்பியாட்’ போட்டி துவக்கவிழாவில் பங்கேற்க, ஈரோட்டில் இருந்து சென்னைக்கு, ரயிலில் செல்ல முடிவு செய்தார். இதற்காக அந்தியூரில் இருந்து ‘டொயோட்டா பார்ச்சூனர்’ காரில், நேற்று முன்தினம் இரவு, 12:30 மணிக்கு புறப்பட்டார். டிரைவர் கார்த்திகேயன் ஓட்டினார்.அப்போது மழை பெய்து கொண்டிருந்தது. பவானி சாலையில் வாய்க்கால்பாளையம் என்ற இடத்தில் சென்றபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் திடீரென கவிழ்ந்தது.இதில் காயம் அடைந்த இருவரும், ஈரோடு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். முதலுதவி சிகிச்சைக்குப் பின், மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.அங்கு நடந்த பரிசோதனையில் எம்.எல்.ஏ.,வுக்கு விலா எலும்பு முறிந்தது தெரிந்தது. தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. டிரைவருக்கு பெரிய அளவிலான காயம் ஏற்படவில்லை. விபத்து குறித்து பவானி போலீசார் விசாரிக்கின்றனர்.

ஆசிரியைக்கு செருப்பால் ‘அடி’: பள்ளியில் விசாரணை

ஓமலுார் : முத்துநாயக்கன்பட்டி அரசு பள்ளியில், பள்ளி ஆசிரியையை இன்னொரு ஆசிரியை, செருப்பால் அடித்தது குறித்து, மாவட்ட கல்வி அலுவலர் விசாரித்தார்.
சேலம் மாவட்டம் ஓமலுார், முத்துநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், நேற்று காலை இறை வணக்கம் நடந்தது. அப்போது உடற்கல்வி ஆசிரியர் கீதா ரமணி அங்கு நின்றிருந்தார்.அப்போது அவரை, பட்டதாரி ஆசிரியை பிரியா செருப்பால் தாக்கினாராம். இதுகுறித்து மாவட்ட கல்வி அலுவலர் சுமதி பள்ளியில் விசாரித்தார்.பின் இருவரிடமும் எழுதி வாங்கிக்கொண்டார். சம்பவத்தை அறிந்து, பள்ளி முன் மக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.’ஆசிரியைகளின் சொந்த பிரச்னையால் சம்பவம் நடந்துள்ளது. மாவட்ட கல்வி அலுவலர் விசாரணை நடந்துள்ளது. அவர் அறிக்கைக்கு பிறகே, நடவடிக்கை தெரியவரும்’ என்று ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

இன்ஸ்பெக்டருக்கு 2 ஆண்டு சிறை

தஞ்சாவூர் : லஞ்சம் வாங்கிய போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு, இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்து, கும்பகோணம் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
தஞ்சாவூர் தாலுகா போலீஸ் ஸ்டேஷனில், கடந்த 2011ம் ஆண்டு சீர்காழியைச் சேர்ந்த சிவக்குமார், 54, இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார்.அப்போது, வழக்கு ஒன்றில் சாதகமாக செயல்பட, பாப்பாநாட்டைச் சேர்ந்த ஜெயக்குமாரிடம் 15 ஆயிரம் ரூபாய் கேட்டு, முன் பணமாக 5,000 ரூபாயை லஞ்சமாக வாங்கினார். லஞ்ச ஒழிப்பு போலீசார், அவரை கைது செய்தனர்.இது தொடர்பான வழக்கு, கும்பகோணம் தலைமை குற்றவியல் நீதித்துறை மற்றும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை நேற்று விசாரித்த நீதிபதி சண்முகப்ரியா, குற்றம் சாட்டப்பட்ட இன்ஸ்பெக்டர் சிவக்குமாருக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனையும், 2,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

கிரைண்டரில் கை சிக்கி 4 விரல் ‘கட்’

திருவாடானை : திருவாடனை அருகே, மாவு அரைக்கும் போது ‘கிரைண்டர்’ இயந்திரத்தில் கை சிக்கி முதியவரின் நான்கு விரல்கள் துண்டாயின.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே அஞ்சுகோட்டையை சேர்ந்தவர் ரவி, 63. இவருக்கு சொந்தமாக மாவு மில் உள்ளது. நேற்று முன்தினம் காலை, அதிகம் பேர் மாவு அரைக்க வந்திருந்தனர். இட்லி, தோசைக்கு பெரிய கிரைண்டரில் மாவு அரைத்து கொண்டிருந்தார்.அப்போது கையால் மாவை தள்ளிய போது கிரைண்டருக்குள் இடது கை சிக்கியதில் நான்கு விரல்கள் துண்டாயின. உடனடியாக துண்டான விரல்களுடன் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கை விரல்களை ஒட்ட வைக்கும் முயற்சி நடந்தது. திருவாடானை போலீசார் விசாரிக்கின்றனர்.

இந்திய நிகழ்வுகள்:

2 வீரர்கள் பலி

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் இந்திய விமானப் படையின் போர் விமானம் விபத்தில் சிக்கியதில், இரண்டு விமானிகள் உயிரிழந்தனர்.
ராஜஸ்தானின் பார்மர் அருகே நேற்று இரவு, ‘மிக் 21’ ரக போர் விமானத்தில், இரண்டு விமானிகள் பயிற்சிக்காக சென்றனர்.அப்போது இந்த விமானம் விபத்தில் சிக்கி கீழே விழுந்து, தீப்பிடித்து எரிந்தது. இதில் இரண்டு விமானிகள் உயிரிழந்தனர். இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விமானப் படை அதிகாரிகளை, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு, விபத்து குறித்து கேட்டறிந்தார்.

ஆற்றுக்குள் கார் கவிழ்ந்து விபத்து: கோவாவில் 4 பேர் உயிரிழப்பு


பணஜி: கோவாவில் கார் ஒன்று ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் உயிரிழந்தனர்.
கோவாவில் மார்கோ மற்றும் பணஜி நகரங்களுக்கு இடையே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் ஆற்றுக்கு மேல் பாலம் உள்ளது. இதில் நேற்று முன்தினம் நள்ளிரவு அதிவேகத்தில் சென்ற கார், முன்னால் சென்ற வாகனத்தை முந்த முயன்றபோது, பாலத்தின் சுவரில் மோதி, ஜுவாரி ஆற்றுக்குள் தலைகீழாக கவிழ்ந்தது. இதில் காரில் இருந்த நான்கு பேரும் உயிரிழந்தனர்.

டில்லி ரயிலில் பாம்பு: பயணியர் கடும் பீதி

கோழிக்கோடு: கேரளாவில் இருந்து புதுடில்லி சென்ற ரயிலில் பாம்பு இருந்ததால் பயணியர் பெரும் பீதி அடைந்தனர்.
கேரளா தலைநகர் திருவனந்தபுரத்தில் இருந்து, புதுடில்லி செல்லும் ‘ஹஸ்ரத் நிஜாமுதீன்’ எக்ஸ்பிரஸ் நேற்று முன்தினம் புறப்பட்டது. அதில் ‘எஸ் – 5 கோச்சில்’ படுக்கைக்கு கீழே ஒரு பாம்பு இருந்ததை பார்த்த பயணி டிக்கெட் பரிசோதகரிடம் கூறினார். அவர் அளித்த தகவலையடுத்து, கோழிக்கோடு நிலையத்தில் தயாராக இருந்த வனத்துறையினர் பெட்டிக்குள் ஏறி பாம்பை தேடினர். ஆனால், அது சிக்கவில்லை. அந்தப் பாம்பை பயணி ஒருவர் மொபைல் போனில் படம் எடுத்து வைத்திருந்தார். அதைப் பார்த்த வனத்துறையினர், இது விஷமற்ற பாம்பு தான் என்று கூறினர். பாம்பு அங்கிருந்த ஒரு துளை வழியாக சென்றிருக்கலாம் எனக் கருதி அதை அடைத்தனர். இதையடுத்து ரயில் ஒரு மணி நேரம் தாமதமாக கோழிக்கோட்டில் இருந்து புறப்பட்டது. ரயிலில் பாம்பு என்ற தகவலால் எஸ்- – 5 கோச்சில் பயணித்தவர்கள் மட்டுமின்றி, அனைத்து பயணியருமே கடும் பீதி அடைந்தனர்.

உலக நிகழ்வுகள்:

ஈரானில் நிலச்சரிவு: 4 பேர் உயிரிழப்பு

டெஹ்ரான் : ஈரானில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் நான்கு பேர் உயிரிழந்தனர்.
மேற்கு ஆசிய நாடான ஈரானின் தலைநகர் டெஹ்ரானில், இமாம்சாதே தாவூத் மத வழிபாட்டு தலம் அமைந்துள்ளது. இந்தப் பகுதியில், நேற்று அதிகாலை முதல் கன மழை பெய்து வருகிறது. இதனால். திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதில், வீடுகள், மரங்கள் பெருமளவு சேதமடைந்தன.இந்நிலையில், கன மழை காரணமாக, இங்குள்ள அல்போர்ஸ் மலையின் அடிவாரத்தில் உள்ள பள்ளத்தாக்கில் நேற்று நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், நான்கு பேர் உயிரிழந்தனர்; ஒன்பது பேர் பலத்த காயமடைந்தனர்.

மாலியில் பயங்கரவாத தாக்குதல்: ராணுவத்தினர் உட்பட18 பேர் பலி

பமாகோ : மாலி நாட்டில் வெவ்வேறு இடங்களில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், ராணுவத்தினர் 15 பேர் உட்பட, 18 பேர் உயிரிழந்தனர்.
மேற்கு ஆப்ரிக்க நாடான மாலியில் ராணுவ ஆட்சி நடக்கிறது. இங்கு, ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு, ராணுவ ஆட்சிக்கு எதிரான தாக்குதல்களை நடத்தி வருகிறது. நேற்று முன்தினம், செவாரே, சோகோலோ, கலும்பா ஆகிய இடங்களில் உள்ள ராணுவ முகாம்கள் மீது பயங்கரவாதிகள் அதிரடி தாக்குதல் நடத்தினர். இதையடுத்து ராணுவத்தினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் ராணுவத்தினர் 15 பேர் உட்பட 18 பேர் உயிரிழந்தனர். ராணுவம் நடத்திய பதில் தாக்குதல்களில் பயங்கரவாதிகள் 48 பேர் கொல்லப்பட்டதாக, மாலி அரசு தெரிவித்துள்ளது.

போர் குற்றவாளிகள்: 6 பேருக்கு துாக்கு

டாக்கா: வங்கதேச போர்க் குற்றங்கள் தொடர்பான வழக்கில், ஆறு பேருக்கு துாக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1971ல் வங்கதேச விடுதலைப் போரின் போது, மேற்கு பாக்., ராணுவத்துடன், கிழக்கு பாக்.,கின், ‘ரஸாகர் பாஹினி’ எனப்படும் துணை ராணுவம் இணைந்து பல்வேறு அட்டூழியங்களில் ஈடுபட்டது. கிழக்கு பாகிஸ்தான் விடுதலைக்காக போராடிய லட்சக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்; எண்ணற்ற பெண்கள் பலாத்காரத்திற்கு ஆளாகினர். இதையடுத்து, இந்தியாவின் ராணுவ உதவியால் கிழக்கு பாக்., வங்கதேசம் என்ற தனி நாடாக உருவானது. இந்நிலையில், 2010ல் வங்கதேசத்தில் சர்வதேச குற்றங்கள் தீர்ப்பாயம் அமைக்கப்பட்டது. இந்த தீர்ப்பாயம், பெரும்பாலான வழக்குகளில் மரண தண்டனை வழங்கி வருகிறது.
இந்நிலையில் நேற்று இந்த தீர்ப்பாயம், போர்க்குற்றங்கள் தொடர்பாக ரஸாகர் பாஹினியைச் சேர்ந்த அம்ஜத் உசேன், சாஹர் அலி, அதியார் ரஹ்மான், மோடாசிம் பில்லா, கமல் உதின், நஸ்ருல் இஸ்லாம் ஆகிய ஆறு பேருக்கு மரண தண்டனை விதித்துள்ளது.இதில், நஸ்ருல் இஸ்லாம் தலைமறைவாக உள்ளார். இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாக, குற்றவாளிகள் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.