பாஜக நிர்வாகி கொலையில் மங்களூருவில் 2 பேர் கைது

பெங்களூரு: கர்நாடகா மாநிலம் தக்ஷின கன்னடா மாவட்டம் மங்களூரு அருகேயுள்ள பெல்லாரேவை சேர்ந்தவர் பிரவீன் நெட்டூரு (28). பாஜக இளைஞர் அணி மாவட்ட செயலாளராக இருந்த இவரை கடந்த 26-ம் தேதி இரவு 9.30 மணியளவில் மர்ம நபர்கள் அடித்து கொன்றனர். இந்த சம்பவத்தை கண்டித்து பாஜகவினர் போராட்டத்தில் குதித்த‌தால் தக்ஷின கன்னட மாவட்டத்தில் பதற்றமான நிலை ஏற்பட்டது.

இதனால் சனிக்கிழமை மாலை 6 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில் பிரவீன் நெட்டூருவின் உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு பெல்லாரேவில் தகனம் செய்யப் பட்டது.

இந்நிலையில் பிரவீன் நெட்டூரு வழக்கில் குற்றவாளிகளை கைது செய்து, உடனடியாக தண்டிக்க வலியுறுத்தி உடுப்பி, தக்ஷின கன்னடா, குடகு உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த இளைஞர் பாஜக நிர்வாகிகள் 50க்கும் மேற்பட்டோர் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இதனால் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், தான் முதல்வராக பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு விழாவை முதல்வர் பசவராஜ் பொம்மை ரத்து செய்தார்.

மேலும் அவர், பெல்லாரேவுக்கு நேரில் சென்று பிரவீன் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அப்போது பசவராஜ் பொம்மை, ‘‘கர்நாடகாவில் பாஜக நிர்வாகிகள் தொடர்ந்து கொல்லப்படுவதை பொறுத்துக் கொள்ள முடியாது. இவ்வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை விரைவில் கைது செய்யுமாறு போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளேன். பாஜக செயல் வீரர்களை பாதுகாப்பதில் அரசு எக்காரணம் கொண்டும் பின்வாங்காது”என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.