ஜூ.வி செய்தி எதிரொலி: இடிந்த பள்ளிக் கட்டடங்களை நேரில் ஆய்வுசெய்த அமைச்சர் அன்பில் மகேஸ்!

சேலம், ஏற்காடு புளியங்கடை பகுதியில் 50 ஆண்டுகளைக் கடந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஒன்று இயங்கிவருகிறது. இந்தப் பள்ளியில் கடந்த பத்தாண்டுக்காலமாக பள்ளிக் கட்டடங்கள் மேற்கூரைகள் இடிந்தும், விரிசல்கள் ஏற்பட்டும் காணப்படுகின்றன.

இது குறித்த செய்தி ஜூலை 30-ம் தேதி வெளியான ஜூனியர் விகடனில் “இடிந்த நிலையில் பள்ளிக் கட்டடங்கள்… இல்லம் தேடி வரும் ஆசிரியர்கள்” என்கிற தலைப்பில் செய்தி வெளியிடப்பட்டது.

இந்தச் செய்தியின் எதிரொலியாக இன்று காலை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் ஏற்காடு பகுதியில் அமையப்பெற்றுள்ள புளியங்கடை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியை நேரில் சென்று ஆய்வுசெய்ததுடன், திங்கள்கிழமைக்குள் கட்டடத்தை இடிக்க உத்தரவிட்டிருக்கிறார்.

கட்டடப் பணி நடைபெற்று முடியும் வரையிலும் மாணவர்கள் தற்காலிகமாகப் படிப்பதற்கான மாற்று ஏற்பாடு வசதிகள் புளியங்கடை கிராமத்திலேயே அமைத்து தரப்படும் என்று கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஃபேஸ்புக் பதிவில், “சேலம் மாவட்டம் ஏற்காடு தொகுதிக்குட்பட்ட புளியங்கடை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி பழுதடைந்திருப்பதாக இன்று (30/07/2022) காலை பத்திரிகைகளில்செய்தி வந்தது. செய்தியைப் படித்த உடனே புளியங்கடை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டேன் . பள்ளியைப் பார்வையிட்டு விரைந்து நடவடிக்கை எடுப்பதாக ஊர் மக்களிடம் உறுதியளித்து விடைபெற்றேன். ஏற்காடு தொகுதி அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் சித்ரா அவர்களை தொடர்புகொண்டு பள்ளி சீரமைப்பு பற்றி விவாதித்து, மாவட்ட ஆட்சியர் அவர்களிடமும் ‘புதிய கட்டடம் அமைப்பதற்கு தேவையான நடவடிக்கையை உடனே செய்யுமாறும், துறைரீதியான உதவிகளைச் செய்வதற்கு காத்திருப்பதாகவும்’ உறுதியளித்தேன்.

முதல்வர் ஸ்டாலின் அவர்களின் வழியில் ஆரோக்கியமான விமர்சனங்களுக்கும், நியாயமான கோரிக்கைகளுக்கும் எப்போதும் முன்னுரிமை கொடுப்போம்! அரசுப் பள்ளி என்பது வறுமையின் அடையாளம் அல்ல. பெருமையின் அடையாளம் என்பதை நிரூபிப்போம்” எனப் பதிவிட்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.