குரங்கு அம்மை தொடர்பான அறிவுறுத்தல்கள் – மத்திய சுகாதாரத்துறை அறிக்கை

புதுடெல்லி,

ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளைத்தொடர்ந்து ஆசிய நாடுகளிலும் குரங்கு அம்மை பரவி வருகிறது. இந்தியாவில் கேரளா மற்றும் டெல்லியில் இதுவரை 8 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் குரங்கு அம்மை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

அந்த வகையில் குரங்கு அம்மை நோய் தொடர்பாக செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை உள்ளிட்ட வழிகாட்டுதல்கள் அடங்கிய அறிக்கை ஒன்றை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

குரங்கு அம்மை வந்தால் செய்ய வேண்டியவை;-

1. குரங்கு அம்மையால் ஒருவர் பாதிக்கப்பட்டது பரிசோதனையில் தெரியவந்தால், அவரை உடனடியாகத் தனிமைப்படுத்த வேண்டும்.

2. குரங்கு அம்மை மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்க சானிடைசர் பயன்படுத்தி கைகளைக் கழுவ வேண்டும் அல்லது சோப்பினால் கழுவ வேண்டும்.

3. முகத்தை நன்றாக முகக்கவசத்தால் மூடிக்கொண்டு, கைகளில் கையுறை அணிந்துதான் நோயாளியிடம் செல்ல வேண்டும். சுற்றுப்புறங்கள், அறை முழுவதும் சானிடைசர் தெளிக்க வேண்டும்.

செய்யக்கூடாதவை;-

1. நோயாளியின் ஆடைகள், பயன்படுத்திய படுக்கை, போர்வை, துண்டு என எதையும் மற்றவர் பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது.

2. நோயாளிகள் பயன்படுத்திய ஆடைகளை சாதாரணமாக துவைக்காமல், அதாவது, நோய் இல்லாதவர்கள் துணியுடன் சேர்த்து துவைக்காமல் தணியாக துவைக்க வேண்டும்.

3. குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவர்கள் பொது இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும், பொதுநிகழ்ச்சிக்கும் செல்லக்கூடாது.

4. வாட்ஸ்அப், வதந்திகள் மூலம் வரும் தவறான தகவல்களை நம்பிக் கொண்டு நோயாளிகளை ஒதுக்கி வைக்கக்கூடாது.

மேலும், குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவர்களுடன் எந்தவிதமான பாதுகாப்பும் இன்றி, அடிக்கடி பழகுவோர், தொடர்பில் இருப்போர் யாருக்கு வேண்டுமானும் தொற்று ஏற்படலாம் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.