அல்-கொய்தா அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டாரா என்பது உறுதிபடுத்தப்படவில்லை – தலிபான்கள்

காபூல்,

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் பதுங்கியிருந்த அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவர் அய்மன் அல்-ஜவாஹிரி மீது அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த சூழலில் ஆப்கானிஸ்தானில் சிஐஏ ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் அல்கொய்தா தலைவர் அய்மன் அல்-ஜவாஹிரி கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உறுதிப்படுத்தப்படாமல் இருந்து வந்தது.

இந்நிலையில் அல்கொய்தா தலைவர் ஜவாஹிரி கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

அல்-கொய்தா இயக்க தலைவன் ஒசாமா பின்லேடனோடு நெருங்கிய தொடர்புடையவர் அய்மான் அல்-ஜவாரி. அவரை அதிமுக்கிய பயங்கரவாதிகள் பட்டியலில் இணைத்திருந்த அமெரிக்க அரசு, கடந்த 2011-ம் ஆண்டிலிருந்து தேடி வந்தது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, காபூலில் அவரது மரணம், அவர் தலிபான்களிடமிருந்து அடைக்கலம் பெற்றாரா என்ற கேள்வியை எழுப்புகிறது.

தலிபான்கள் ஜவாஹிரிக்கு விருந்தளித்து அடைக்கலம் அளித்ததன் மூலம் ஒப்பந்தத்தை “முழுமையாக மீறியுள்ளனர்” என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன் கூறினார்.

2020 ஆம் ஆண்டு ஒப்பந்தப்படி, தலிபான்கள் அமெரிக்காவுக்கு அளித்த உறுதி, அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறும்பட்சத்தில், தலிபான்கள் எந்த ஒரு பயங்கரவாத அமைப்புகளுக்கும் ஆப்கானிஸ்தானில் புகலிடம் கொடுக்காது என்று உறுதி அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் அந்த ஒப்பந்தத்தை தலிபான்கள் மீறிவிட்டதாக அமெரிக்கா குற்றம்சாட்டியது. ஆனால் அந்த ஒப்பந்தப்படியே, தாங்கள் செயல்பட்டு வருவதாக தலிபான் தரப்பு கூறுகிறது.

இந்த நிலையில், காபூலில் ஜவாஹிரியின் இருப்பையோ அல்லது மரணத்தையோ இன்னும் அந்நாட்டு அரசு உறுதிப்படுத்தவில்லை. அமெரிக்கா தெரிவித்துள்ளபடி, அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவர் அய்மன் அல்-ஜவாஹிரி கொல்லப்பட்டாரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாக தலிபான்கள் கூறியுள்ளனர்

இது பற்றிய உண்மைத் தன்மையைக் கண்டறிய தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.