தாய்ப்பாலை ஃபிரிட்ஜில் சேமித்து வைக்கும்போது இதையெல்லாம் கவனியுங்க!

குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்ட வேண்டும் என இன்றைய தாய்மார்கள் பெரிதும் விரும்பினாலும் அதற்கு அவர்களின் வேலைச்சூழல் தடையாக அமைகிறது. வேலைக்குச் செல்லும் காரணத்தால் தாய்ப்பாலை நேரடியாகக் கொடுக்க முடியாவிட்டாலும் அதை முறையாக சேகரித்து சேமித்து அதை எப்படி குழந்தைக்கு புகட்ட வேண்டும் என பல சந்தேகங்கள் எழலாம். அதற்குரிய பதில்களை சென்னையைச் சேர்ந்த, தாய்ப்பால் ஆலோசகர் கவிதாவிடம் கேட்டோம்:

தாய்ப்பால்

“பெண்களுக்கு மகப்பேறு விடுமுறை ஆறு மாதங்கள் என நிர்ணயம் செய்யப்பட்டிருந்தாலும், அனைத்து நிறுவனங்களிலும் அது பின்பற்றப்படுவதில்லை. குழந்தை பிறந்து அலுவலக வேலைக்குத் திரும்பும் சூழலில் தாய்ப்பாலை எடுத்து சேமித்து வைத்துவிட்டுச் சென்றால் வீட்டிலிருப்பவர்கள் அதை குழந்தைக்குப் புகட்ட ஏதுவாக இருக்கும். தாய்ப்பாலை சாதாரண வெப்ப நிலையில் (Room temperature) நான்கு முதல் ஆறு மணிநேரம் வரை சேமித்து வைக்கலாம்.

ஃபிரிட்ஜ் கதவில் வைத்தால் 24 மணி நேரம் வரை சேமித்து வைக்கலாம். ஃபிரிட்ஜின் உட்புறத்தில் வைக்கும்போது இரண்டு முதல் இரண்டரை நாள்கள் வரை வைத்துப் பயன்படுத்தலாம். ஃபிரீஸரில் வைக்கும்போது 6 முதல் 9 மாதங்கள் வரைகூட உறைய வைக்கலாம். தாய்ப்பாலை ஃபிரிட்ஜில் சேமித்து வைக்கும்போது பாத்திரத்தில் சேமிக்கும் தேதி மற்றும் நேரத்தைக் குறிப்பிட வேண்டும்.

Fridge (Representational Image)

முதலில் சேமித்ததை முதலில் பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு சேமித்து வைக்கும் தாய்ப்பாலை எந்த நிலையிலும் கொதிக்க வைக்கவே கூடாது. ஒரு பாத்திரத்தில் வெந்நீர் வைத்து, அதனுள் மற்றொரு பாத்திரத்தை வைத்து அதில் தாய்ப்பாலை ஊற்றி சாதாரண வெப்பநிலைக்கு கொண்டு வர வேண்டும். அதன்பிறகு ஒரு ஸ்பூன் மூலமோ பாலாடை மூலமோ குழந்தைக்கு அந்த பாலைக் கொடுக்கலாம்.

ஃபீடிங் பாட்டில் மூலம் இந்த பாலைத் தரக்கூடாது. ஃபீடிங் பாட்டில் மூலம் தாய்ப்பால் கொடுத்தால் தாயிடமிருந்து குழந்தை, பாலை உறிஞ்சுவது குறையத் தொடங்கும். மேலும் வயிற்றுப்போக்கு ஏற்படவும் அதிக வாய்ப்புண்டு. தாய்ப்பாலை எடுப்பதற்கு ‘பிரெஸ்ட் பம்ப்’ (Breast Pump) பயன்படுத்தப்படுகிறது. அந்த பம்ப் பாலை வெளியே எடுப்பதற்கு ஒரு தூண்டுதலாக மட்டுமே இருக்கும். அதன்பிறகு கைகள் மூலமே தாய்ப்பாலை சேகரித்து, சேமிக்க வேண்டும்.

ஃபீடிங் பாட்டில் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்

நிறைய பேர் பம்ப் மூலம் சிறிதளவுதான் பால் வருகிறது என தவறாக எண்ணுகிறார்கள். தாய் வெளியிடத்தில் இருக்கும்போது குழந்தை அருகில் இருக்காது. அப்போது தாய்ப்பாலைத் தூண்டுவது மட்டுமே பம்ப்பின் வேலை. கைகளால் பாலை சேகரிக்கும்போதுதான் சரியான அளவில் கிடைக்கும். தாய்ப்பாலை சேமித்து வைக்கும் பாத்திரம் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் அல்லது கண்ணாடியால் ஆன பாத்திரமாக இருக்கலாம். பிளாஸ்டிக் பாத்திரங்களைத் தவிர்க்க வேண்டும்.

அகலமான வாய் உடைய பாத்திரமாக, அதிக வளைவுகள் இல்லாததாக, சுத்தமாக கழுவக்கூடிய வகையில் இருக்க வேண்டும். அப்போதுதான் எந்தவிதத் தொற்று பாதிப்பும் ஏற்படாது. பிரெஸ்ட் பம்ப்பை தினந்தோறும் அலுவலத்துக்கு கொண்டு செல்ல முடிவதில்லை என்ற காரணத்தால் வேலைக்குச் செல்லும் பெண்கள் பலர் தாய்ப்பால் கொடுப்பதைத் தொடர்ந்து செய்ய முடிவதில்லை எனக் கூறுகிறார்கள்.

Lactation Expert Kavitha

மேலும் அலுவலகத்தில் தாய்ப்பாலை சேகரிப்பதற்கும் முறையான இடம் இருப்பதில்லை. கழிவறைகளில் இருந்து கொண்டுதான் தாய்ப்பாலை சேகரிக்க முடிகிறது,வேறு இடம் இருப்பதில்லை. கழிவறைகள் எந்த அளவுக்கு சுகாதாரமானவை என பல கேள்விகள் வருகின்றன. அலுவலகத்தில் வேலை பார்க்கும் நேரத்தில் பால் சுரப்பது, பால் கட்டுவது போன்ற பிரச்னைகள் வருகின்றன.

சக ஆண் பணியாளர்களோடு பணியாற்றும்போது இது போன்ற பிரச்னைகள் மிகவும் சிரமப்படுத்துவதாகப் பல பெண்கள் கூறுகின்றனர். அலுவலகங்கள் பெண் பணியாளர்களின் நலன் கருதி தாய்ப்பாலை சேகரிப்பதற்காக சிறிய இடவசதி செய்து தரலாம். சுகாதாரமான ஓர் இடம், மற்றும் ஒரு சிறிய ஃபிரிட்ஜ் இருந்தால் போதும். அங்கு அமர்ந்து தாய்ப்பாலை சேகரித்து ஃபிரிட்ஜில் சேமித்து வைத்துவிட்டு, வீட்டுக்குச் செல்லும்போது எடுத்துக் கொள்ளலாம்.

தாய்ப்பால்

ஒரு தாய் குழந்தைக்குத் தொடர்ந்து தடையின்றி தாய்ப்பால் தரும்போது அந்தக் குழந்தை நோய்வாய்ப்படுவது குறையும். குழந்தை ஆரோக்கியமாக இருக்கும் பட்சத்தில் தாய் விடுப்பு எடுப்பது குறையும்‌. தாய்ப்பால் கொடுப்பது என்பதில் தாய்-சேய் நலத்தைத் தாண்டி சமூக அளவிலும் பெரும் பங்கு உண்டு” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.