அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி, தைவானுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருப்பதாகத் தகவல் வெளியான நாள் முதலே அமெரிக்காவை, சீனா எச்சரித்து வந்தது. இருப்பினும், சீனாவின் எச்சரிக்கைகளையெல்லாம் கண்டுகொள்ளாமல், நான்சி பெலோசி தைவானுக்கு வந்திறங்கினார். தைவான் ஒரு சுதந்திர நாடாக இருப்பினும், சீனா இன்னும்கூட அதைச் சொந்தம் கொண்டாடி வருகிறது.

நான்சி பெலோசி தைவானிலிருந்து அமெரிக்காவுக்குத் திரும்பிவிட்ட போதிலும், தைவானைச் சுற்றி முக்கியப்பகுதிகளில், சீன ராணுவம் பயிற்சி மேற்கொண்டுவருவதாகச் செய்திகள் வெளியாகின. அதையடுத்து, ரஷ்யா-உக்ரைன் போல் சீனா-தைவான் இடையே போர் மூளும் என்று பல தரப்பிலும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், சீன ராணுவத்தின் 68 போர் விமானங்கள் மற்றும் 13 போர்க்கப்பல்கள் தைவானின் எல்லைக்கோட்டை கடந்ததாக, தைவான் ராணுவம் கூறியிருக்கிறது. இதையடுத்து சீனாவுக்கு கண்டனம் தெரிவித்திருக்கும் தைவான் பாதுகாப்பு அமைச்சகம், “கம்யூனிஸ்ட் இராணுவம் வேண்டுமென்றே, தைவானைச் சுற்றியிருக்கும் கடல் மற்றும் வான் எல்லையைக் கடந்து அத்துமீறுவதை கண்டிக்கிறோம்” என அறிக்கை வெளியிட்டிருக்கிறது.