தாய்ப்பால் : குழந்தைக்கும் தாய்க்கும் இடையிலான பிணைப்பு அதிகரிக்கும் – குடும்ப சுகாதார பணியகத்தின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர்

ஒரு குழந்தையின் ஊட்டச்சத்தான தாய்ப்பாலின் ஊடாக குழந்தைக்கும் தாய்க்கும் இடையில் ஒரு அன்பான பிணைப்புக்கு ஏற்படுவதாக குடும்ப சுகாதார பணியகத்தின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்துள்ளார்.

நெருங்கிய உறவினர்கள், குடும்ப சுகாதாரப் பணியாளர்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் ஊடக நிறுவனங்களை உள்ளடக்கிய தனிப்பட்ட மற்றும் சமூக செல்வாக்கு குழுக்கள் ஆகியோர் தாய்ப்பால் வழங்குவதை ஊக்கப்படுத்துவதில் முக்கியம் வகிக்கின்றனர். ஒரு குழந்தை சரியான வயதை அடையும் வரை தொடர்ந்து தாய்ப்பால் கொடுப்பதை ஊக்குவிக்க இவர்கள் பங்களிக்க வேண்டும். பொறுப்புகளை இனம் கண்டு தாய்ப்பால் வழங்குவதை ஊக்கப்படுத்துவது சுகாதார மற்றும் சமூக ரீதியாக மிகவும் முக்கியம் என்றும் அவர் கூறியுள்ளார்.

“தாய்ப்பால் ஊட்டுவதற்கு முன் வருவோம், அறிவுறுத்துவோம், ஒத்துழைப்போம்” என்ற தொனிப்பொருளில் ஆகஸ்ட் 01 முதல் 07 வரை பிரகடனப்படுத்தப்பட்டுள்ள உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நேற்று (04) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே விசேட வைத்திய நிபுணர் இவ்வாறு தெரிவித்தார்.

“தாய்ப்பால் ஒரு குழந்தையின் ஊட்டச்சத்து, தொற்று நோய்களில் இருந்து பாதுகாப்பு பெற உதவுகிறது. மற்றும் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு இன்றியமையாதது. தாய்ப்பால் கொடுக்கும் ஒரு தாய்க்கு சரியான ஊட்டச்சத்து, மனநலம் மற்றும் அன்றாட வேலைகளில் இருந்து சிறிது சுதந்திரம் வழங்குவதற்கு குழந்தை மற்றும் தாயுடன் தொடர்புடைய அனைவரும் முயற்சிக்க வேண்டும்.

நாட்டின் இன்றைய பொருளாதார சூழ்நிலையில் ஒரு குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது ஒரு குடும்பத்திற்கு பெரும் பொருளாதார நிவாரணமாக உள்ளது. தாய்ப்பாலின் மூலம் குழந்தைக்கு கிடக்கின்ற ஊட்டச்சத்து தனித்துவமானது. தாயின் ஆரோக்கியத்திற்காக மருத்துவமனைகள் மற்றும் மகப்பேற்று சிகிச்சை நிலையங்களுக்கு மருந்துகள் மற்றும் ஊட்டச்சத்துக்களை தொடர்ந்து வழங்க அரசாங்கம் செயல்பட்டு வருகிறது. கடந்த நாட்களாக, மூலப்பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக, திரிபோஷ உற்பத்தி தடைபட்டது, ஆனால், தற்போது மீண்டும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதன்படி, கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு வழமை போன்று திரிபோஷா வழங்குவதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட குடும்ப சுகாதார பணியகத்தின் சமூக வைத்திய நிபுணர் ஷிரண்யா ஜயவிக்ரம கருத்து தெரிவிக்கையில்…..

“ஒரு தாய், தாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் அதற்கு ஏற்ற ஒரு சூழலை உருவாக்குவது அவளின் கணவர் உட்பட நெருங்கிய உறவினர்கள் மற்றும் சுகாதாரத் துறைகளின் பொறுப்பாகும். தாய்ப்பால் கொடுப்பதை ஊக்குவிப்பது ஒரு சமூகப் பொறுப்பாகும். ஒரு சங்கிலியில் உள்ள இணைப்புகள் போன்ற பல்வேறு குழுக்கள் இதனுடன் இணைக்கப்பட்டுள்ளன. தாயின் வேலை செய்யும் இடமும் இதை வெகுவாக பாதிக்கிறது. சமீபகாலமாக, தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கும் அதேபோன்று தகப்பன்மாருக்கும் மகப்பேறு விடுமுறை போன்றவற்றை அதிக நாட்கள் வழங்க சில அமைப்புகள் தீர்மானம் எடுத்துள்ளன. இத்தகைய நிலைமைகள் மிகவும் சாதகமானவை. அத்தகைய உரிமைகளைப் பெற தொழிற்சங்கங்கள் போன்ற குழுக்கள் எழுந்து நிற்க வேண்டும். மேலும், ஊடக நிறுவனங்களுக்கும் இங்கு மிக முக்கிய பங்கு வகிக்க முடியும்.

மேலும், தாய்ப்பால் கொடுப்பதன் முக்கியத்துவத்தையும், முறையான சுகாதார வழிகாட்டல்களையும் தகுதிவாய்ந்த நிபுணர்களுடன் இணைந்து அவர்களால் சிறப்பாகத் தெரிவிக்க முடியும். ஒரு தாய்க்கு தாய்ப்பால் வழங்குவது மிகவும் முக்கியமானது. இது புற்றுநோயின் அபாயத்தைக் கூட குறைக்கிறது. எனவே, இதுபோன்ற விடயங்ளைப் பற்றி மக்களுக்குத் தெரிவிப்பது மிகச் சிறந்தது.

பாலூட்டும் தாயின் சரியான சுகாதாரப் பழக்கவழக்கங்கள் மற்றும் தாய்ப்பால் கொடுப்பதன் முக்கியத்துவம் குறித்து, கொழும்பு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர், விசேட வைத்திய நிபுணர் நிஷானி லூகஸ் இவ்வாறு கருத்து தெரிவித்தார்…

“தாய்ப்பால் ஊட்டுவதனால் ஒரு பெண்ணின் உடல் அழகு குறைவடைவதாக சமூகக் கருத்துக்கள் நிலவுகிறன. இது ஒரு தவறான கருத்து. தாய்ப்பால் கொடுக்கும் போது தாயின் உடலில் சில மாற்றங்கள் ஏற்படும். அதற்கு ஏற்றவாறு உள்ளாடைகள் போன்றவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் தனது அழகை முறையாக பராமரிக்கலாம். குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு தாய்ப்பால் அத்தியாவசியமானது. இதன் மூலம் குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கின்றது. இதனால், குழந்தைக்கு நோய்கள் வருவதற்கான ஆபத்து மிகக் குறைவு. தாயின் ஆன்டிபாடிகள் மற்றும் உயிர் செல்கள் தாய்ப்பாலின் மூலம் குழந்தைக்கு வழங்கப்படுகின்றன.

இவை பால்மா போன்ற செயற்கையான பொருட்களில் இருந்து கிடைப்பதில்லை. பால்மாவில் இருந்து தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகள் குழந்தைகளின் உடலில் நுழைகின்றன. தாய்ப்பாலில் இருந்து நன்மை பயக்கும் நுண்ணுயிரிகள் மட்டுமே குழந்தையின் உடலில் நுழைகின்றன. தாய்ப்பால் கிடைக்கும் குழந்தைக்கு எதிர்காலத்தில் கூட நீரிழிவு நோய் போன்ற நோய்கள் ஏற்படும் அபாயம் குறைவு” என்றும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.