பேராசிரியர்கள் பணி நியமனத்தில் முறைகேடு… தஞ்சை பூண்டி கல்லூரியில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணை!

தஞ்சாவூர் அருகே உள்ள பூண்டி கிராமத்தில் புஷ்பம் கலைக் கல்லூரி 1956-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி, மறைந்த துளசி அய்யா வாண்டையார் இந்தக் கல்லூரியினை நிர்வகித்து வந்தார். ஏழை மாணவர்களுக்கு எட்டாக்கனியாக இருந்த கல்வி அனைத்து தரப்பினருக்கும் கிடைக்கும் வகையில் கல்லூரியைச் செயல்படுத்தினார். இந்தக் கல்லூரியில் தமிழ்நாடு முழுவதிலிருந்தும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் கல்வி பயின்றிருக்கின்றனர்.

கிருஷ்ணசாமி வாண்டையார்

அரசு அறிவித்த கட்டணத்தைத் தாண்டி ஒரு பைசாகூட கூடுதலாக வசூலிக்காத கல்லூரி என்ற பெயரைப் பெற்றதுடன், கட்டணம் வசூலிக்காமல் பல மாணவர்களைப் படிக்க வைத்து உருவாக்கியவர் என்பதால் துளசி அய்யா வாண்டையாரை கல்வி வள்ளல் என்றே பலரும் அழைத்தனர். அவர் மறைவுக்குப் பிறகு அவர் மகன் கிருஷ்ணசாமி பொறுப்பேற்று கல்லூரியை நிர்வகித்து வருகிறார். கிருஷ்ணசாமி காங்கிரஸ் கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளராக இருக்கிறார். இவர் டி.டி.வி.தினகரனின் சம்பந்தி என்பது குறிப்பிடத்தக்கது.

பூண்டி புஷ்பம் கல்லூரி

இந்த நிலையில், பூண்டி கல்லூரியில் 2015 முதல் 2017-ம் ஆண்டு வரை பேராசிரியர் பணி நியமனத்தில் முறைகேடு நடைபெற்றதாக லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்குக் கிடைத்த தகவலின்படி, அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 2017-ம் ஆண்டு உதவி பேராசிரியர்கள் பணி நியமனத்தில் இன சுழற்சி முறையைப் பின்பற்றவில்லை எனக் கூறப்படுகிறது. உதவி பேராசிரியர்கள் தியாகராஜன், கற்பகசுந்தரி ஆகிய இருவரும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்பதை மறைத்து, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் எனப் போலியான சாதிச் சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்திருக்கின்றனர்.

இதை உண்மை என சமர்ப்பித்து அரசை ஏமாற்றிய கல்லூரி நிர்வாகம், 2017-ம் ஆண்டு முதல் தற்போது வரை அவர்களுக்கு ஊதியமாக ரூ.55 லட்சம் பெற்று வழங்கியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இன சுழற்சி முறையில் பணி நியமனத்துக்குத் தேர்வானவர்களின் சாதிச் சான்றிதழ்களின் உண்மைத் தன்மையைச் சரிபார்க்காமல் உதவி பேராசிரியர்களாகப் பணி நியமனத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாகத் தஞ்சாவூர் மண்டல கல்லூரி கல்வி முன்னாள் துணை இயக்குநர் அறிவுடைநம்பி, உதவிப் பேராசிரியர்கள் தியாகராஜன், கற்பகசுந்தரி, கல்லூரியின் முன்னாள் தாளாளரும், முன்னாள் எம்.பி-யுமான மறைந்த துளசி அய்யா வாண்டையார் உள்ளிட்டோர்மீது ஆறு பிரிவுகளில் கடந்த மாதம் 27-ம் தேதி வழக்கு பதிவுசெய்யப்பட்டது.

பூண்டி புஷ்பம் கல்லூரி

அதைத் தொடர்ந்து, இன்று கல்லூரியில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸார் தரப்பில் பேசினோம். “கல்லூரி பணி நியமனத்தில் நிர்வாகத்தின் தரப்பில் முறைகேடு நடந்திருப்பதாக துளசி அய்யா வாண்டையார் மகன் கிருஷ்ணசாமி வாண்டையார் எங்களிடம் புகார் அளித்திருக்கிறார். அதற்கான ஆதாரங்களும் கிடைத்த நிலையில், வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறோம்” என்றனர்.

மறைந்த துளசி அய்யா வாண்டையார்மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டிருப்பது தங்களை வேதனையுடைய செய்திருப்பதாகக் கூறுகிறார்கள் அந்தக் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.