விலையில்லா பயணச்சீட்டைத் தொலைத்த பெண்ணுக்கு அபராதம்~ டிக்கெட் பரிசோதகர் மீதான நடவடிக்கை சரியானதா?

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்த சித்ரா என்பவர், சேலத்தில் இருந்து ராசிபுரத்துக்கு நகரப் பேருந்தில் வந்துள்ளார். மகளிருக்கு வழங்கப்படும் விலையில்லா பயணச்சீட்டை அவர் தொலைத்த நிலையில், டிக்கெட் பரிசோதகர் அன்பழகன், அவரிடம் 100 ரூபாய் அபராதம் கட்ட வேண்டும் என்று கூறியிருக்கிறார். இதனால், அவருடன் சித்ரா வாக்குவாதத்தில் ஈடுபட, பயணிகள் பலரும் சித்ராவுக்கு ஆதரவாகப் பேசிய வீடியோ வெளியானது. இதை அடுத்து அன்பழகன் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்.

குறிப்பிட்ட பேருந்துகளில் மகளிர் இலவசமாகப் பயணம் செய்யலாம் என ஆளும் திமுக அரசின் அறிவிப்புக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. பெண்கள் இலவசமாகப் பயணம் செய்யலாம் எனும்போது எதற்காக பயணச்சீட்டு வழங்கப்பட வேண்டும்? அந்த விலையில்லா பயணச்சீட்டைத் தொலைத்து விட்டால் அதற்கும் அபராதம் கட்ட வேண்டும் என்று சொல்வது நியாயம்தானா என, சென்னையைச் சேர்ந்த, தொழிலாளர் முன்னேற்றச்சங்கப் பேரவையின் பொதுச்செயலாளர் சண்முகத்திடம் கேட்டோம்…

சித்தரிப்பு படம்

“தமிழ்நாடு போக்குவரத்துறையால் மாநிலம் முழுவதும் 22 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றுள் 6 ஆயிரம் பேருந்துகளில் மட்டுமே மகளிர் இலவசமாகப் பயணம் செய்ய முடியும். இலவசமாகப் பயணம் செய்யலாம் என்றாலும் அவர்களுக்கு விலையில்லாப் பயணச்சீட்டு வழங்க வேண்டும் என்பது அரசாணை. எத்தனை பேர் விலையில்லாமல் பயணம் செய்கின்றனர் என்கிற கணக்குக்காக இது தேவைப்படுகிறது.

நமது போக்குவரத்து விதிமுறைகளைப் பொறுத்தவரையில் பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்யக்கூடாது. இலவசப் பயணமாக இருந்தாலும் விலையில்லாப் பயணச்சீட்டோடுதான் பயணம் செய்ய வேண்டும். இந்த விதியின் அடிப்படையில்தான் டிக்கெட் பரிசோதகர், அப்பெண்ணிடம் அபராதம் கேட்டிருப்பார்” என்கிறார் சண்முகம்.

போக்குவரத்துக் கழகம், பணி மாறுதல் அளவுக்கு டிக்கெட் பரிசோதகர் மீது நடவடிக்கை எடுத்திருக்கக்கூடாது என்கிறார் சென்னையைச் சேர்ந்த, சி.ஐ.டி.யு பொதுச்செயலாளர் ஆறுமுகநயினார்…

“இலவசப் பயணம் என்றாலும் அதற்கான கட்டணத்தை அரசு போக்குவரத்துக் கழகங்களுக்குத் தர வேண்டும். அதற்கான கணக்குக்காகத்தான் பயணச்சீட்டு கொடுக்கப்படுகிறது. எத்தனை பேர் இதனால் பயன்பெறுகின்றனர் என்கிற புள்ளி விவரத்துக்காகவும் வழங்கப்படுகிறது. ஆக, பயணச்சீட்டு கொடுப்பது கட்டாயம். விலையில்லா பயணச்சீட்டை அப்பெண் தொலைத்து விட்டபோது அந்த டிக்கெட் பரிசோதகர் அறிவுறுத்தியோ, எச்சரித்தோ அனுப்பியிருக்கலாமே தவிர அபராதம் விதித்திருக்கக்கூடாது.

பஸ் – சித்தரிப்பு படம்

பொது வெளியில் பிரச்னைக்குள்ளாகாத வகையில் அலுவலர்கள் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். இதற்கு எதிர்வினையாக போக்குவரத்துக் கழகம் அவரை பணி மாறுதல் செய்தது அராஜகமானது. இது நியாயமாக கடமையைச் செய்கிறவர்களுக்கு ஓர் அச்சத்தையும், சலிப்பையும் கொடுப்பதாக அமைந்துவிடும். லட்சக்கணக்கில் மக்கள் பேருந்துகளில் பயணம் செய்கிறார்கள். அவர்களில் பயணச்சீட்டைத் தொலைப்பது அரிதிலும் அரிதானது என்பதால் அதற்காக புதிய விதிமுறைகள் கொண்டு வரத் தேவையில்லை” என்கிறார் ஆறுமுகநயினார்.

போக்குவரத்து விதிகளிலேயே ஏன் இந்த மாற்றம் கொண்டு வரப்படவில்லை என்கிற விளக்கத்தைக் கேட்பதற்காக போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரைத் தொடர்பு கொண்ட நிலையில், அவரிடம் பேச முடியவில்லை.

இன்றைய சமூக சூழலில் படித்த பெண்கள் கிராமப்புறங்களில் இருந்துகூட பக்கத்து நகரங்களுக்கு பணிக்குச் சென்று கொண்டிருக்கின்றனர். தினமும் பேருந்தில் சென்றுவரும் அவர்களுக்கு, இலவசப் பயணம் என்பது மிகவும் பயனளிக்கக்கூடியது. ஆகவேதான், இத்திட்டத்தைக் கொண்டு வந்ததும் பொதுமக்கள் இதனை மனதார வரவேற்றனர்.

அரசு பேருந்து – சித்தரிப்பு படம்

மேற்குறிப்பிட்டுள்ள ராசிபுரம் சம்பவத்தை அடிப்படையாக வைத்துப் பார்த்தால், பயணச்சீட்டு இலவசமாக வழங்கப்பட்டாலும் அதனை பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்கிற பொறுப்புணர்ச்சி அனைவருக்கும் இருக்க வேண்டும் என்பது வலியுறுத்தப்படுகிறது.

பெண்களுக்கு இலவசப் பயணம் என்கிற நிலையில் பயணச்சீட்டைத் தொலைத்துவிட்ட பெண்ணிடம் அபராதம் வசூலிப்பது எந்த வகையிலும் நியாயமற்றது. போக்குவரத்து விதிகளைப் பொறுத்தவரையிலும் பயணச்சீட்டு இல்லாத பயணியிடம் அபராதம் வசூலிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருப்பதன் விளைவாக அப்பரிசோதகர் அபராதம் கேட்டிருக்கிறார். அவர் தனது கடமையையே செய்திருக்கிறார். இந்தக் குழப்பத்துக்கான அடிப்படை காரணம் போக்குவரத்து விதிகளில் மாற்றம் கொண்டு வரப்படாததுதான். இப்படியாக ஒரு திட்டத்தை செயல்படுத்தும்போதே இவ்விதிகளிலும் மாற்றம் கொண்டு வந்திருந்தால் இந்தப் பிரச்னை நேர்ந்திருக்காது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.