திருப்பதி: காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஏழுமலையான் கோயில் கட்டுவது என திருமலை திருப்பதி தேவஸ்தானத்தினர் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதன்படி மகாராஷ்டிர அரசு நவி மும்பை உல்வே பகுதியில் ரூ. 500 கோடி மதிப்புள்ள 10 ஏக்கர் நிலத்தை திருப்பதி தேவஸ்தானத்திற்கு சமீபத்தில் வழங்கியது. இங்கு ஏழுமலையான் கோயிலை தன் சொந்த செலவில் கட்டித்தர பிரபல துணி நிறுவனமான ‘ரேமாண்ட்’ஸ்’ முன் வந்தது. இந்நிறுவனம் இதற்காக ரூ. 60 முதல் 70 கோடி செலவிட்டு ஏழுமலையான் கோயிலை கட்டித்தர உள்ளது.
இதற்கான அடிக்கல் நாட்டு விழா வரும் ஆகஸ்ட் மாதம் 21-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துக்கொள்ள வருமாறு நேற்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி. சுப்பாரெட்டி, தலைமை நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி ஆகியோர் மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகிய இருவருக்கும் நேற்று நேரில் சென்று அழைப்பு விடுத்தனர். இருவரும் நேரில் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துக்கொள்ள சம்மதம் தெரிவித்ததாக அறங்காவலர் சுப்பாரெட்டி தெரிவித்தார்.